சூலூர்: கோவை சூலூர் அருகே தனியே வசித்த மூதாட்டியை ஒரு பவுன் மோதிரத்திற்காக கழுத்தை நெரித்துக்கொன்ற பக்கத்து வீட்டு முதியவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வளையபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருக்காணி அம்மாள் (80). இவரது கணவர் கருப்பசாமி கடந்த சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். அருக்காணி அம்மாளுக்கு திருமணமான 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அருக்காணி அம்மாள் மட்டும் வளையபாளையம் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
பக்கத்து ஊரில் இருக்கும் மகள் சாந்தாமணி தனது தாய்க்கு தினமும் உணவு கொடுத்து விட்டு பார்த்து செல்வது வழக்கம். அதன்படி நேற்றும் சாப்பாடு கொண்டு வந்துள்ளார். அப்போது அருக்காணி அம்மாள் கட்டிலில் இறந்து கிடந்தார். அவரது 1 பவுன் மோதிரம் மாயமாகி இருந்தது. மர்ம நபர் ஒரு பவுன் மோதிரத்திற்காக மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது.
விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் கோபாலன் (65) என்பவர் அருக்காணி அம்மாளை கழுத்தை நெரித்துக்கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது கோபாலன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘வேலை ஏதும் இல்லாமல் தனது மகள் வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு செலவுக்கு பணம் வேண்டி இருந்தது. அப்போது அருக்காணி அம்மாள் விரலில் தங்க மோதிரம் அணிந்திருப்பதை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தேன்.
அதை திருட திட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அவருடன் சென்று பேசிக்கொண்டிருந்தேன். திடீரென அவரை கீழே தள்ளிவிட்டு அவரது விரலில் இருந்த மோதிரத்தை கழற்ற முயன்றேன். அப்போது அருக்காணி அம்மாள் அலறி சத்தம்போட்டார். காட்டிக்கொடுத்துவிடுவார் என்று அச்சத்தில் அவரது கழுத்தை துண்டால் இறுதிக்கொன்றுவிட்டு மோதிரத்தை திருடினேன்.
பின்னர் எதுவும் தெரியாததுபோல் கூட்டத்துடன் அருக்காணி அம்மாளின் உடலை பார்த்து பரிதாபப்படுவதுபோல் நடித்தேன். ஆனால் கொலை செய்து மோதிரத்தை திருடி வந்தபோது மக்கள் பார்த்துவிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் கொடுத்த தகவலின்படி சிக்கிக்கொண்டேன்’ என்று தெரிவித்தார். இதனையடுத்து அருக்காணி அம்மாளின் மோதிரத்தை பறிமுதல் செய்த போலீசார் கோபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்திலேயே கொலையாளியை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
