கோவை: சிறை வளாகத்தில் இருந்து தப்பிய கைதி பைக்கை திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரிடம் தனிப்படை விசாரணை நடத்தினர். அவர் ஏற்கனவே 2 முறை தப்பியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சத்தியமங்கலத்தில் நேற்று இரவு அவர் கைது ெசய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் ராகவன் (எ) கோழிக்காரன் (25). இவரை ஈரோட்டில் ஒரு திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பெங்களூரில் ஒரு திருட்டு வழக்கில் கர்நாடகா போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றபோது தப்பி ஓடினார். அவரை அன்னூர் போலீசார் பவானியில் அவரை கைது செய்து கடந்த 30ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்ற போது மீண்டும் போலீசாரிடம் இருந்து தப்பி சென்றார். மாநகர மற்றும் மாவட்ட போலீசார் அடங்கிய 6 தனிப்படை அமைக்கப்பட்டு கைதி ராகவனை தேடி வந்தனர். இந்த நிலையில் ராகவன் சிறையில் இருந்து தப்பி பைக்கை திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
கைதி ராகவன் சிறையில் இருந்து தப்பி அந்த வழியாக வந்த லாரியில் ஏறி சென்றுள்ளார். பின்னர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே இறங்கி அங்கிருந்த பைக்கை திருடி சென்றுள்ளார். பைக் திருடு போனது குறித்தும் ராகவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ராகவன் இலங்கை அகதி என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பவானி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். ராகவன் கர்நாடகா, அன்னூர் போலீசாரிடம் தப்புவதற்கு முன்பே கேரளாவில், கேரளா போலீசார் கைது செய்து சிறைக்கு அழைத்து சென்ற போது தப்பியதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.
இந்நிலையில் நேற்று இரவு ராகவனை சத்தியமங்கலம் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். ராகவன் தப்பிப்பதில் வல்லவர் என்பதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு அவரை சிறப்பு பாதுகாப்புடன் போலீசார் அன்னூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
நாகை சிறையில் கைதி தற்கொலை முயற்சி
நாகப்பட்டினம் ஏழைபிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (22). இவர், நாகப்பட்டினத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளின் கீழ், வெளிப்பாளையம் போலீசாரால் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சக்திவேல் மற்றும் அங்குள்ள கைதிகள் இடையே தகராறு காரணமாக, அவர் வேறு அறைக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சக்திவேல் நேற்று தான் சாப்பிட்ட தட்டால் கழுத்தின் பின்பகுதி மற்றும் கால் பகுதிகளில் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.


