கோவை: அரசு தொழில்நுட்ப கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரி விடுதியில் தனியாருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள கேண்டீனில் அங்கு தங்கி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தரமற்ற, சுத்தம் இல்லாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அந்த உணவில் பூச்சிகளும், புழுக்களும் அவ்வப்போது வருவதால் உணவு உட்கொண்ட பிறகு உடல்நல கோளாறு ஏற்படுகிறது.
இது தொடர்பாக புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை என மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று மாலை கல்லுரி வளாகத்தில் இருக்கக்கூடிய அந்த கேண்டீனில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த சமையல் அறை மற்றும் அங்கு பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள உணவுகள் சுத்தமில்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அடுத்த 15 நாட்களுக்குள் இது தொடர்பான விளக்கத்தை அந்த தனியார் ஒப்பந்தத்தை ஏற்றுள்ள ஒப்பந்ததாரர்கள் கொடுக்க வேண்டும் என்று நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உணவு மற்றும் சமையல் நடைபெறும் இடம் ஆகிய புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படும் முன்பு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
