கோவை: கோவையில் ஒரே நாளில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 19 நாளில் நடந்த 7வது கொலையால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கோவை சிங்காநல்லூர் தேவேந்திர குல வீதியை சேர்ந்தவர் வேலுசாமி (56). பத்திர எழுத்தர். இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். கடந்த 17ம் தேதியில் இருந்து அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் முகம் மற்றும் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், வேலுசாமிக்கும், அதே பகுதியில் வசிக்கும் உறவினரான சிவக்குமார் (50) என்பவருக்கும் உள்ள சொத்து தகராறில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வேலுசாமியை சிவக்குமார் கட்டையால் சரமாரியாக அடித்து கொலை செய்தது தெரிந்தது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை நேற்று கைது செய்தனர்.
இதேபோல், சூலூர் அருகே உள்ள செலக்கரச்சல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (39). டிரைவர். நேற்று மாலை செந்தில்குமார் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் கூலித்தொழிலாளி கண்ணன் (35) கண்டபடி வாய்க்கு வந்ததை பேசி சத்தம் போட்டு கொண்டிருந்தார். இதைப்பார்த்த செந்தில்குமார் ஏன் சத்தம் போடுகிறாய்? என கண்ணனை பார்த்து தட்டிக்கேட்டார். இதனால், திடீரென ஆவேசமடைந்த கண்ணன் அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து செந்தில்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கண்ணனை கைது செய்தனர்.
இதேபோல, சூலூர் அருகே கருமத்தம்பட்டி சோமனூர் நொய்யல் கரையில் இருக்கும் டாஸ்மாக் பார் அருகே நேற்று மாலை ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். விசாரணையில் அவர் காரணம்பேட்டை பகுதியில் வசித்து வந்த தேவதாஸ் (40) என்பது தெரியவந்தது. திருச்சியை சேர்ந்த இவர் காரணம்பேட்டை பகுதியில் தங்கி மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவரது நண்பர்கள் ரஞ்சித், அசோக் ஆகிய மூன்று பேரும் கடந்த மாதம் கருமத்தம்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி உள்ளனர். அப்போது மூவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்ததை தொடர்ந்து சென்று விட்டனர்.
நேற்று மாலை தேவதாஸ் சோமனூரில் உள்ள அதே டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்துள்ளார். அப்போது அங்கு தேவதாஸ் நண்பர்கள் மற்றும் கடந்த மாதம் தகராறு செய்த ரஞ்சித், அசோக் ஆகிய இருவரும் அங்கு கத்தியுடன் காத்திருந்தனர். டாஸ்மாக் கடைக்கு சென்ற தேவதாஸ் மது வாங்கிக் கொண்டு கடைக்கு அருகிலேயே மது அருந்த சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற அசோக், ரஞ்சித் மீண்டும் தேவதாசுடன் தகராறில் ஈடுபட்டு அவர்கள் தயாராக கொண்டு வந்திருந்த கத்தியால் தேவதாசை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பினர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பீளமேட்டில் நவீன், கிணத்துக்கடவில் அஸ்வின், பாப்பநாயக்கன்பாளையத்தில் சாந்தி, கோவை தனியார் கல்லூரி மாணவர் அமுதன், நேற்று ஒரே நாளில் 3 பேர் கொலை என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த 19 நாளில் கோவையில் மட்டும் 7 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளதோடு, தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.



