நாடு, மொழி, இனம், ஏழை, பணக்காரன் என எந்தவித பாகுபாடும் இல்லாமல் உலக மக்கள் அனைவராலும் ருசித்து பருகப்படும் பானம் என்றால் அது சாட்சாத் காபியும், டீயும்தான். உலகில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு காலையில் எழுந்தவுடன் முதல் வேலை காபி, டீ குடிப்பதுதான் என்றாகியிருக்கிறது. இந்த பானங்களைக் குடித்தால் மற்ற வேலைகள் ஓடும். காலைப்பொழுதை இனிமையானதாக்கும் காபியும், டீயும் உருவான வரலாறு சுவாரஸ்யங்கள் மிக்கது. அதில் காபி உருவான வரலாற்றை இப்போது தெரிந்துகொள்வோம். காபியை முதன்முதலில் கண்டுபிடித் தவர் காலித் என்கிற ஒரு முஸ்லீம் ஆடுமேய்ப்பாளர். கி.பி. 9ம் நூற்றாண்டில் எத்தியோப்பியாவில் தன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, அவரது ஆடுகளில் சில ஆடுகள் ஒரு செடியில் இருந்த கொட்டைகளைச் சாப்பிட்டதும் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்துள்ளன. ஆடுகள் திடீரென உற்சாகத்துடன் துள்ளிக் குதிப்பதைக் கண்ட காலித். அந்த செடியிலிருந்து சில கொட்டைகளை பறித்து சிறிது கடித்து சாப்பிட்டுள்ளார். அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் தனது உடலில் ஒரு உற்சாகம் பரவுவதை உணர்ந்துள்ளார். பிறகு, அந்தக் கொட்டைகள் சிலவற்றை பறித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பியதும், துணியில் மூட்டையாக கட்டிக்கொண்டு வந்த கொட்டைகளை அடுப்பின் அருகில் இருந்த ஒரு பாத்திரத்தில் போட்டுள்ளார். அதில் ஒருசில கொட்டைகள் கைதவறி, எரிந்துகொண்டு இருந்த விறகு அடுப்பின் தீயில் விழுந்துள்ளன. கொட்டைகள் தீயில் விழுந்ததும், அதிலிருந்து ஒருவித மணம் பரவியுள்ளது. அப்போது தீயை அணைப்பதற்காக தண்ணீரை ஊற்றியபோது, அதிலிருந்து நுரையுடன் கூடிய வாசனை இன்னும் அதிகமாக தென்பட்டது. அந்த கொட்டைகளை எடுத்து சுத்தம் செய்து காபியாக தயாரித்திருக்கிறார். இப்படி எத்தியோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட காபி அங்கிருந்து ஏமன் தேசத்திற்கு சென்றுள்ளது. ஏமன் தேசத்தில் அன்றைய காலத்தில் அங்கிருந்த சூஃபிகள் இரவு நேரத்தில் தொழுவதும், இரவு முழுவதும் இறைத் தியானம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இரவு நேரத்தில் தூக்கத்தைத் தவிர்த்துக்கொள்வதற்காக, சூஃபிகள் இக்காபிக் கொட்டையை பயன்படுத்தி பானம் தயாரித்து அருந்தி வந்திருக்கிறார்கள். அதற்கு அல்காவா என்று பெயர் வைத்து அழைத்துள்ளனர். அதன்பின்னர், 15ம் நூற்றாண்டில் மக்கா மற்றும் துருக்கி நாடுகளுக்குச் சென்றது காபி. அன்றைய நாட்களில் மக்காவில் மிகப்பெரிய அளவில் வணிகர்கள் கூட்டம் கூடுவார்கள். அந்த நேரத்தில் ஏமன் தேசத்து வியாபாரிகள் மக்காவில் காபியை அறிமுகப் படுத்தினார்கள். அதன்பிறகு, காபி பல நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்தது. துருக்கி மூலமாக 16ம் நூற்றாண்டில் வட ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு அது பரவியது.
17ம் நூற்றாண்டில் இங்கிலாந்து போன்ற நாடுகளில் காபி ஹவுஸ் தோற்றுவிக்கப்பட்டது.16ம் நூற்றாண்டில்தான் இது இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர், தொடர்ச்சியாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மேலும் சில மாநிலங்களிலும் காபி வேகமாக பரவியது. ஆடு மேய்ப்பர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட காபி இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. தினசரி 1.6 பில்லியன் கப் காபிகள் பயன்படுத்தப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி நாடுவிட்டு நாடு பரவிய இந்த காபி, இப்போது பலவிதமான ருசிகளோடு வந்துள்ளன. அதில் கும்பகோணம் டிகிரி காபி, வரகாபி, சுக்குமல்லி காபி, ஐஸ் காபி, டல்கோனா காபி, கேப்சிக்கோனா காபி என அனைவரையும் கவர்ந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட காபிக்கு அடிமையானவர்கள் ஏராளமானோர் நம் இந்தியாவில் இருக்கிறார்கள். காபியை மட்டுமே பருகிக்கொண்டு உணவைக் குறைத்து சாப்பிட்டுக் கொண்டு உயிர் வாழும் ஜீவன்களும் நம் மக்களில் உள்ளனர். இம்மாதிரி காபிக்கு அடிமையான மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், காபி வாய்க்குத்தான் சுவையே தவிர, அதிகளவு அருந்தும்போது அது இதயத்திற்கு எதிரியாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


