பொதுவாக காவிரி டெல்டா பகுதிகளில் நெல்தான் பிரதான பயிர். பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. தற்போது திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி பகுதிகளிலும் தென்னை சாகுபடி கோலோச்சத் தொடங்கி உள்ளது. தென்னை சாகுபடியில் சில பயிர்களை ஊடுபயிர்களாக விளைவிக்கலாமே என யோசித்து களத்தில் இறங்கி நல்ல வருமானமும் பார்த்து வருகிறார் தஞ்சாவூர் மாவட்டம் வடுகக்குடி பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்ற விவசாயி. தனது வயலில் வாழை இலைகள் அறுவடையில் மும்முரமாக இருந்த மதியழகனைச் சந்தித்தோம். ``எந்தப் பயிரை சாகுபடி செய்தாலும் அதில் கூடுதல் வருமானம் பாரக்க என்ன வழி என்பதைத்தான் விவசாயிகள் யோசிக்க வேண்டும். அவ்வாறு மாற்றி யோசித்தால் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளலாம். அப்படித்தான் எனது 2 ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்ய முடிவு செய்தேன். நீண்ட காலப் பயிரான தென்னையை சாகுபடி செய்தால் உடனே லாபம் கிடைக்காது. உடனடி வருமானம் பெற வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, தென்னையில் ஊடுபயிராக வாழையை வைக்கலாம் என முடிவு செய்தேன். வாழையிலும் வருமானம் பெற கால தாமதமாகும் என்பதால், அதிலும் உடனடி வருமானம் தரும் ஒரு பயிரை சாகுபடி செய்ய வேண்டும் என நினைத்து உளுந்து சாகுபடி செய்யத் தீர்மானித்தேன்.
அதன்படி தென்னையில் ஊடுபயிராக வாழை, அதில் ஊடுபயிராக ஒரு போகத்திற்கு மட்டும் உளுந்து என சாகுபடி செய்தேன். இந்த ஃபார்முலா எனக்கு வெற்றியைத் தந்தது’’ என தனது ஊடுபயிருக்குள் ஊடுபயிர் சாகுபடி கதையைக் கூறிய மதியழகன் அதன் சாகுபடி முறைகள் குறித்து விளக்கினார். ``தென்னங்கன்றுகளை நடவு செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக பக்குவப்படுத்த வேண்டும். அதேபோல நல்ல விளைச்சல் கொடுக்கும் சரியான தென்னை ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். தென்னை மரம் வளர மணல் கலந்த களிமண் அல்லது கரிசல் மண் சிறந்ததாக இருக்கும். இந்த மண் இருக்கும் பகுதியில் தென்னை சாகுபடியை நம்பிக்கையோடு தொடங்கலாம். தென்னை மரங்களுக்கு போதுமான அளவு தண்ணீர் தேவை. பருவமழையின்போது நீரை சேகரித்து வைப்பது அவசியம். தேவைப்பட்டால் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். தேவையான அளவுக்கு உரங்களை அளித்து, மண்ணை சத்து மிகுந்ததாக மாற்ற வேண்டும். நான் இயற்கை வழியில் ரசாயன உரங்கள் இன்றி சாகுபடி செய்கிறேன். பஞ்சகவ்யா உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறேன்.
தென்னை மரங்களை பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்க முறையான பராமரிப்பு செய்வது அவசியம். தென்னைக்கு தேரோட.. வாழைக்கு வண்டியோட… கரும்புக்கு ஏரோட…. நெல்லுக்கு நண்டோட… என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். தென்னை மரங்களுக்கு இடையே தேர் ஓடும் அளவுக்கு இடைவெளி வேண்டுமாம். வாழைக்கு இடையே வண்டி ஓட வேண்டும். அதாவது டயர் வண்டி, கட்டை வண்டி. அதேபோல கரும்புகளுக்கு இடையில் ஏர் ஓட வேண்டும். நெற்பயிர்களுக்கு இடையில் நண்டு ஓட வேண்டும். இப்படித்தான் நம் முன்னோர்களின் விவசாய முறை இருந்தது. இந்த இடைவெளிகள் இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் தடையின்றி படர்ந்து வளரும். இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டே போகும். இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல் சிறிதாக இருக்கும்.
தென்னை மரங்களில் பலவகை உண்டு குட்டை, நெட்டை மற்றும் இளநீர் ரகங்கள் என்று உள்ளன. ரகத்தைப் பொருத்து நடவு செய்யும்பொழுது மரத்திற்கு மரம் குறைந்தது இருபது அடியும் அதிகபட்சம் முப்பது அடியும் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் நெட்டை ரகங்கள் என்றால் 25 அடி × 25 அடி, குட்டை ரகங்கள் என்றால் 20 அடி × 20 அடி, வீரிய ஒட்டு ரகங்கள் என்றால் 26 அடி × 26 அடி இடைவெளி விட வேண்டும். அப்படித்தான் நான் 25 அடி × 25 அடி இடைவெளியில் தென்னங்கன்றுகளை நட்டேன். இதில் ஊடுபயிராக 8 அடி இடைவெளிக்கு ஒரு கன்று வீதம் வாழைக்கன்றை சாகுபடி செய்தேன். இதில் ஊடுபயிராக உளுந்து பயிரை விதைத்தேன். இந்த முறையில் ஒரு போகம் மட்டும் உளுந்து சாகுபடி செய்யலாம். அது நமக்கு முதல் வருமானம். வாழை மரங்கள் வளர்ந்து விட்டால் அதில் ஊடுபயிர் சாகுபடி செய்ய முடியாது.(மதியழகனின் சாகுபடி விவரங்கள் அடுத்த இதழிலும் தொடரும்)
தொடர்புக்கு:
மதியழகன்: 98655 21504.


