ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொன்னூறு முட்டை என ஒரு விடுகதை உண்டு. தென்னையின் மகத்துவத்தை விளக்கும் வகையில் இந்த விடுகதை அமைந்திருக்கும். அதாவது ஒரு விதைத் தேங்காயை குழிக்குள் வைத்தால் அது வளர்ந்து, பின்னாளில் குலை குலையாய் தேங்காய்களைத் தரும் என்பதை விளக்கும் விடுகதை இது. இப்போது கன்றுகளாகவே தென்னையை வைக்கிறார்கள். முன்பை விட விரைவிலேயே அது மகசூலையும் தருகிறது. ஆனால் அதற்கு நாம் கொடுக்கும் ஊட்டம் முக்கியம். தென்னைக்கென்று சில உரமிடும் முறைகள் இருக்கின்றன. இந்த முறையில் உரமிட்டால் சிறப்பான மகசூல் கிடைக்கும் என்கிறார் வேளாண் பொறியாளரான பிரிட்டோ ராஜ்.வருடத்திற்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு மரத்திற்கு கொடுக்க வேண்டிய அடிஉரத்தின் அளவு:
1. மக்கிய தொழுஉரம் 20 கிலோ அல்லது மண்புழு உரம் 5 கிலோ
2. வேப்பம் புண்ணாக்கு 1-2 கிலோ
3. ஆலை அல்லது செங்கல் சூளை அல்லது எரித்த சாம்பல் 5 கிலோ
4. சிறிதாக நறுக்கப்பட்ட எருக்கு இலை 20 கிலோ அல்லது 8-10 தண்டுகள்
5. ராக் பாஸ்பேட் 1 கிலோ அல்லது எலும்பு உரம் 1 கிலோ
6. சுண்ணாம்பு 200 கிராம்
7. கடல் உப்பு 100 கிராம்.
தென்னை மரத்தின் தண்டில் இருந்து சுமார் 4-5 அடி தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள வட்டப் பாத்தியில் உள்ள மண்ணைச் சுரண்டி, அதனுள் மேற்கண்ட பொருட்களை இட்டு சுரண்டிய மண்ணை மீண்டும் மேலே போட்டு மூடி விடவும். அல்லது மரத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 திசைகளில் 4-5 அடி தள்ளி உத்தேசமாக 2x2x1 அடிகள் என்ற கணக்கில் தோண்டி அல்லது மண்வெட்டியில் 4 வெட்டுகள் வெட்டி கிடைக்கும் குழியில் மேற்கண்ட பொருட்களை இட்டு மூடி பின்பு தண்ணீர் கொடுக்கலாம்.இந்தப் பொருட்கள் மீது ஈரப்பதம் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது. மாதத்தின் பிற நாட்களில் இடுபொருட்கள் கொடுக்கும்போது, இந்த பொருட்களின் மீது கிடைக்கும் வகையில் ஊற்றி விடலாம்.புதிதாக நடவு செய்யப்பட்ட தென்னை முதல் பல ஆண்டுகள் இருக்கும் தென்னை வரை அனைத்து மரங்களுக்கும் இதனை செய்யவும்.
மரத்தின் தலைப்பகுதியில் அதாவது மட்டைகளுக்கு இடையே கொடுக்க வேண்டிய இடுபொருட்கள்:
1. தூளாக்கப்பட்ட வேப்பம்புண்ணாக்கு 1-2 கிலோ
2. சூடோமோனாஸ் 20 மில்லி + மெட்டா ரைஸியம் 20 மில்லி இவற்றை தென்னை மரங்களின் மட்டைகளுக்கு இடையே கொடுக்கலாம்.
தொடர்புக்கு:
பிரிட்டோ ராஜ் - 99444 50552



