பூமியில் ஜனிக்கும் எல்லா உயிர்க்கும் தண்ணீர் அத்தியாவசியம். அதனால்தான் திருவள்ளுவர் நீரின்றி அமையாது உலகு என ஆணித்தரமாக கூறிச்சென்றிருக்கிறார். உயிர் என்று சொல்லிவிட்டோம், கண்டிப்பாக அதில் பயிர்களும் அடங்கும் அல்லவா? ஆம்... ஒவ்வொரு பயிருக்கும் தண்ணீர் மிக அவசியம்தான். அந்த வகையில் தென்னைக்கும் நீர்ப்பாசனம் என்பது மிகமிக முக்கியமான ஒன்று. தென்னை விவசாயத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் மரத்தின் வளர்ச்சி குன்றி, விளைச்சல் பாதிப்புக்குள்ளாகும். மட்டைகள் வளைந்து தொங்குதல், அடிமட்டைகள் ஒடிந்து விழுதல், குரும்பை, முதிர்ச்சி அடையாத இளங்காய்கள் உதிர்வது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு பெருமளவிற்கு விளைச்சல் இழப்பு ஏற்படும். அத்துடன் காய்கள் சிறுத்து கொப்பரையின் எடையும் குறைந்து விடும். இதுபோன்ற பிரச்சினைகள் தோன்றாமல் இருக்க சில வழிமுறைகளை நாம் நிச்சயம் பின்பற்ற வேண்டும்.
தண்ணீர் தேவை
தென்னைக்கு தேவையான நீர் மேலாண்மையை வேர்ப் பகுதிகளுக்குள் செய்தல் மிகவும் அவசியம். தென்னையின் தண்ணீர் தேவையானது பருவநிலை, மண்ணின் தன்மை, மரத்தின் வயது போன்ற காரணிகளைப் பொறுத்து அமையும். பொதுவாக, தென்னங்கன்று நட்ட முதல் ஆண்டு வரை ஒருநாள் விட்டு ஒருநாள் 10 லிட்டர் தண்ணீரும், இரண்டு வயது முதல் மூன்று வயது இளம் மரங்களுக்கு வாரம் இருமுறை 40 லிட்டர் தண்ணீரும், அதன்பின் வாரம் ஒருமுறை 600 லிட்டர் நீரும் அவசியம்.
பாசன மேலாண்மை
தென்னையின் பெரும்பாலான உறிஞ்சி வேர்கள் 2 மீட்டர் ஆர வட்டப் பரப்பளவிற்குள்ளேயே அமைந்துள்ளதால் அப்பகுதிக்கு மட்டும் நீர்ப்பாசனம் செய்தல் போதுமானது. பரவல் நீர்ப்பாசனத்தால் தண்ணீர் அதிகளவில் விரயம் ஆவதுடன், களைகள் முளைத்து மண்ணிலுள்ள ஈரத்தினையும், பயிர்ச் சத்துக்களையும் வெகு விரைவில்வெளியேற்றி விடும்.இடப்படுகின்ற உரங்கள் கரைந்து மண்ணின் ஆழத்தில் வேர்களுக்கு அப்பாலும் சென்று விடுவதுடன், பயிர்உணவுகள் அதிக அளவில் நீரில் கரைந்து அடர்த்தி குறைந்து விடுகின்றன. மேலும், ஒரு மரம் விட்டு ஒரு மரத்திற்கு நோய்க்காரணிகள் பரவுவதற்கு ஏதுவாகிறது. பரவல் நீர்ப்பாசன முறையினைத் தென்னையில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். முறையற்ற நீர்ப்பாசன முறையை தொடர்ந்தால், நிலத்தடிநீரின் அளவு குறுகிய காலத்தில் குறைந்துவிடும். அதன் காரணமாக மேலும் மேலும் ஆழ்குழாய்களின் ஆழத்தை அதிகரித்து நீர் எடுப்பதன் மூலம் அந்த வெற்றிடத்தை நிரப்பிட கடல் நீர் நிலத்தடியில் புகுந்திட ஏதுவாகும். பிற்காலங்களில் களர், உவர் மண்ணாக மாறிவிடவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, நிலத்தடி நீரைநிலை நிறுத்திட முறையான பாசன முறைகளைக் கையாள வேண்டும்.
வட்டப்பாத்தி
நீர் பயன்பாட்டுத்திறனை அதிகரிக்க, தென்னை மரத்தைச் சுற்றி, 1.8 மீட்டர் ஆரத்தில் வட்டப் பாத்திகள் அமைத்து நீர் கட்டும் முறை சமதளம் உள்ள நிலங்களுக்கு ஏற்றது. இரண்டு தென்னை மர வரிசைக்கு இடையில் பாசன வாய்க்கால் அமைத்து, ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் உள்ள வட்டப்பாத்திகளில் தனித்தனியே தண்ணீர் கட்ட வேண்டும்.இதனால் ஒவ்வொரு மரத்திற்கும் இடப்படுகின்ற உரங்கள் தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டு வீணாவதை தடுப்பதுடன் உரப் பயன்பாட்டுத் திறனையும் கூட்டலாம். வட்டப்பாத்தியில் 6 செ.மீ. தண்ணீர் கட்டும்பொழுது 600 லிட்டர் தேவைப்படும். இவை சுமார் ஒரு வாரத்திற்கு போதுமானது. தட்பவெப்ப நிலைக்கு ஏற்பவும், மண்வகைக்கு ஏற்பவும் இந்த நீர்ப்பாசன இடைவெளியை சிறிது மாற்றி நீர்ப்பாய்ச்சலாம்.
சொட்டுநீர் பாசனம்
தென்னைக்கு சொட்டுநீர் பாசனம் ஒரு சிறந்த முறையாகும். சரிவான நிலப்பகுதிகள் சமதள, மணற்பாங்கான நிலங்களில் இம்முறையில் பாசனம் செய்வதன் மூலம், இருக்கின்ற தண்ணீரை தேவையான அளவு கொடுத்து அதிக மரங்களைப் பராமரிக்கலாம்.தென்னை மரத்தின் நான்கு திசைகளிலும் ஒரு மீட்டர் தூரத்தில் 45 செமீ நீள, அகல, ஆழ குழிகளை எடுத்து, அதில் சிறிதளவு மக்கிய தென்னை நார்க்கழிவு அல்லது நெல் பதர்களை இட வேண்டும். அதில் 40 மீட்டர் விட்டம், 30 செ.மீ. நீளமுள்ள பிவிசி குழாயை செங்குத்தாக வைத்து அதில் சொட்டு நீர் பாசனக் குழாயை (டிரிப்பர்களை) 15 செ.மீ. ஆழத்தில் வைப்பதால் தண்ணீர் நேராக தென்னையின் வேர்ப் பகுதிக்கு கிடைக்கின்றது. சொட்டு நீர்ப்பாசனத்துடன் இட வேண்டிய உரங்களைக் கரைத்து வேர்ப்பகுதியில் சொட்டச் செய்யலாம்.
இதனால் களைகள் முளைப்பது குறைகின்றது. உரப் பயன்பாட்டுத்திறன் மேம்படுகிறது. சொட்டுநீர் பாசனத்தின் மூலம் 30 விழுக்காடு தண்ணீரை சேமிக்கலாம். ஆரம்ப காலத்தில் செலவு அதிகமானாலும், எளிதில் கையாளவும், பராமரிப்பு செலவு குறையவும், கோடைக்காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும்போது தொட்டிகளில் தண்ணீரை ஏற்றி வைத்திருந்து குறைவான அழுத்தத்திலேயே நீர் அளிப்பதைத் தொடரலாம். தழை, மணி, சாம்பல் சத்து உரங்கள் கரையக்கூடிய கலவையாக இப்போது கிடைக்கின்றன. இம்முறையில் நுண்ணூட்டத்தையும் தேவையான அளவு அளிக்கலாம். இதனால் உர விரயம் தவிர்க்கப்படுவதுடன் தண்ணிர் இடுவதற்கான தண்ணீர் செலவையும் குறைக்கலாம்.

