இந்திய அரசியலில் இதுவரை தாமரை, கை, சைக்கிள், உதயசூரியன், இரட்டை இலை, விசில் எல்லாம் பார்த்தாச்சு… ஆனால் இப்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருப்பது “கரப்பான் மக்கள் கட்சி!” (கரப்பான் ஜனதா பார்ட்டி - கஜக).
தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலை இல்லாத இளைஞர்களை “கரப்பான் பூச்சி” என்று ஒப்பிட்ட கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் தீப்பிடித்தது. அதற்கு பதிலடியாக “அப்படியா? அப்படின்னா நாங்கதான் கரப்பான் பூச்சிகள்!” என்று இளைஞர்கள் மீம்களுடன் ஆரம்பித்த ஜாலி இயக்கம், இன்று நாடு முழுக்க வைரலாகிவிட்டது.
இந்தக் கட்சியின் முக்கிய கோஷமே வேடிக்கையாக இருக்கிறது. “சோம்பேறிகளுக்கும் வேலை இல்லாதவர்களுக்குமான குரல்!” என்று தங்களைத் தாங்களே கிண்டல் செய்துகொண்டே இளைஞர்கள் இந்த இயக்கத்தை டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
சில நாட்களிலேயே சமூக வலை தளங்களில் இந்தக் கட்சியின் பக்கத்தை லட்சக்கணக்கானோர் பின்தொடர ஆரம்பித்தனர். மீம்கள், ரீல்ஸ், நக்கல் பதிவுகள் என எங்கு பார்த்தாலும் கரப்பான் பூச்சிதான்!
இதில் இன்னும் பெரிய காமெடி என்னவென்றால், “கரப்பான் கட்சியில் சேருங்கள்” என்று படிவங்கள் இணைப்புகள் அனுப்ப ஆரம்பித்ததால் இந்தக் கட்சி மீதான பார்வை இன்னும் அதிகரித்திருக்கிறது. இளைஞர்களின் சக்தி என்னவென்று இப்போது ஒன்றிய அரசுக்கு விளங்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
சிலர் இதை வெறும் இணைய நகைச்சுவை என்கிறார்கள். இன்னும் சிலர் “இது இளைஞர்களின் கோபத்துக்கும் விரக்திக்கும் சின்னம்” என்கிறார்கள். எதுவானாலும் இப்போது கரப்பான் ஜனதா பார்ட்டி இன்ஸ்டா பக்கம் 25 மில்லியன்களைக் கடந்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது.
