Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூட்டணி அதிருப்தியாளர்களை திரட்டும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மலராத கட்சியின் மாநில புதிய தலைவர் ‘நான் பழசை மறக்கிற ஆளு இல்லை’ என யாரை மனதில் வைத்து சொன்னார் என இலைக்கட்சியினர் புதுசா விவாதத்தை தொடங்கி இருக்காங்களாமே என்னவாம்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘அல்வா ஊரின் எம்எல்ஏ இலை கட்சியில் இருந்து மலராத தேசிய கட்சிக்கு தாவியவர். தேசிய கட்சியின் சட்டமன்ற குழு தலைவராகவும் இருக்கிறாரு.. தற்போது கட்சியின் மாநில தலைவர் பதவியையும் பிடித்து விட்டார்.. இருந்தாலும் ‘நான் பழசை மறக்கும் ஆள் இல்லை’ என தனது இலைக்கட்சி மீதான பாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறாராம்.. தற்போது தேசிய கட்சியின் மாநில தலைவர் பதவியை பிடித்து விட்ட நிலையில், அல்வா ஊரில் நடந்த பிரஸ் மீட்டில் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டாராம்.. அதாவது, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குக்கர்காரர் என்னை நேரடியாக வந்து வாழ்த்தினார் என கூறியதுடன், மம்மி காலத்தில் குக்கர்காரரை பிடித்துதான் இலைக்கட்சியினர் எல்லோரும் பதவி வாங்கினார்கள் என குண்டை வேற தூக்கிப் போட்டுட்டாராம்.. குக்கர்காரரை பார்த்து பதவி வாங்கியதை யாரும் மறுக்க முடியாதுன்னு வேறு ஆணித்தரமாக சொன்னாராம்.. கூடவே பழசை யாரும் மறக்கக் கூடாது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறாரு.. இவர் சேலம்காரரையும், கூவத்தூரையும் மனதில் கொண்டு இப்படி பேசுகிறாரான்னு ரொம்பவே கொதித்துப் போய் இருக்கிறாங்களாம் அல்வா மாவட்டத்து இலைக்கட்சியினர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மலராத தாமரையுடன் கூட்டணி அறிவிப்பால் சேலத்துக்காரர் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை அழைத்து பேச திரைமறைவு வேலையில் மாஜி அமைச்சர் ஈடுபட்டிருக்கிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மலராத தாமரையுடன் இலைக்கட்சி கூட்டணி அறிவிப்பால் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த டெல்டா மாவட்டத்தை சேர்ந்த நகர செயலாளர், மாஜி எம்எல்ஏ சமீபத்தில் கட்சியில் இருந்து விலகினாங்க.. இவர்களை தொடர்ந்து டெக்ஸ்டைல் மாவட்டத்தில் 2ம் கட்ட தலைவர்கள், சேலத்துக்காரர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக வெளிப்படையாகவும் தெரிவித்து விட்டார்களாம்.. இந்த தகவல் மாஜி அமைச்சர் விஜயமானவர் கவனத்துக்கு முக்கிய நிர்வாகிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கு.. உடனே அவர், அவர்களை நேரிடையாக அழைத்து பேச முடிவு செய்துள்ளாராம்.. குறிப்பாக, தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ள மற்ற நிர்வாகிகளையும் அழைத்து பேச முடிவு செய்துள்ளாராம்.. இதற்கான வேலை திரைமறைவில் நடந்துகிட்டு வருதாம்.. இந்த தகவல் வெளியே கசிந்து விடாக்கூடாது என்பதிலும் ரொம்பவும் கவனமாக கையாண்டு வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மீண்டும் மலர்ந்த கூட்டணியால் சைலன்ட்மோடுக்குபோன இலைகட்சி மாஜி மந்திரி எந்த நிகழ்ச்சியிலும் வாய்திறக்கிறது இல்லையாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலைகட்சி மீண்டும் மலராத கட்சியுடன் கூட்டணியை புதுப்பித்ததால் மாஜி அமைச்சர்கள் பலர் கடுப்பில் இருக்கிறார்களாம்.. குறிப்பாக புரம் என்று முடியும் மாவட்டத்தில் மலராத கட்சிக்கு எதிராக அதிகமாக பேசிய மாஜி அமைச்சரோ ரொம்பவும் அப்செட்டில் இருக்கிறாராம்.. கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தோல்விக்கு காரணம் கூட்டணிதான் என்று வெளிப்படையாகவே விமர்சித்து இருந்தாராம்.. அதாவது வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கூட்டணி சேர்ந்ததால் களத்தில் எப்படி சந்திப்பது என்று கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.. இதனால் எந்த நிகழ்ச்சியிலும் இலைகட்சி மாஜி அமைச்சர் வாய்திறக்க வில்லையாம்.. செய்தியாளர்களை சந்திப்பதையும் அறவே தவிர்த்து வருகிறாராம்.. இதனால் வனத்தில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்ற இலைகட்சி மாஜி, வாய்திறந்து உளறலுக்கு இடம் கொடாமல் வந்த கையோடு ஓட்டம் பிடித்து விட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

மாஜி போலீஸ்காரரை பதவியில் இருந்து தூக்குவதற்குள் மேலிடத்திற்கு போதும் போதும் என்றாகி விட்டதாம்.. ஆனாலும் அவர் பல்வேறு பிரயத்தனம் செய்ததால் தலைமை ரொம்பவே அப்செட் ஆகிவிட்டதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மலராத கட்சியின் மாநில தலைவராக இருந்த மாஜி போலீஸ்காரர் பொய்யான தகவலை சொல்வதில் முதலிடத்தில் இருக்காராம்.. தன்னை யாரும் எதுவும் செய்யமுடியாது என்றிருந்த நிலையில்தான் அவரது பதவி பறிப்பு நடந்துச்சாம்.. ரெண்டாங்கட்ட தலைவர்கள் எல்லோரும் டெல்லிக்கு காவடி எடுத்த நிலையில் யாருடைய பேச்சும் எடுபடலையாம்.. ஆனால் நிதிமந்திரி கோவைக்கு வந்து வியாபாரிகளுடன் நடத்திய சந்திப்பின்போது தான் கட்சியில் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சதாம்.. அவர் டெல்லிக்கு போய் உண்மையை சொன்ன பிறகு தான், மாஜி போலீஸ்காரரை தூக்குவது என்பது உறுதியாச்சுதாம்..ஆனால் அவரை பதவியில் இருந்து அப்புறப்படுத்துவதற்குள் டெல்லிக்கு போதும் போதும் என்றாகி விட்டதாம்.. அதேநேரம் தொடர்ந்து பதவியில் இருந்தே ஆகணும் என்பதில் மாஜி போலீஸ்காரரு ரொம்பவே உறுதியா இருந்தாராம்.. இதற்காக அவர் பிடிக்காத ஆளே இல்லை என கட்சிக்காரங்க சொல்றாங்க.. இதுவரை இருந்த தலைவர்கள் எல்லாருமே தலைமை சொன்னதை கேட்டுக்கிட்டு உடனே ஒதுங்கிட்டாங்களாம்.. ஆனால் இவர் மட்டும்தான் பல்வேறு பிரயத்தனத்தை செஞ்சாராம்.. இதனால தலைமை ரொம்பவே அப்செட் ஆகிட்டதாம்.. இப்போ அவருக்கு தற்காலிகமாக ஒரு பொறுப்பு வழங்கி இருக்காங்களாம்.. இனிமேல் பதவி என்பது அவரது நடவடிக்கையை பொறுத்துதான் இருக்குமாம்.. அதுவரை அவர் நியமிக்கப்பட்ட தலைவருக்கு கீழ் படிந்தால் மட்டுமே அடுத்த கட்டத்தை நினைத்து பார்க்கலாமாம்.. இல்லை என்றால் இலவு காத்த கிளி கதைதான் அவருக்கும் நடக்குமுன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க.. என்றாலும் பதவி பறிக்கப்பட்ட வேகத்தில் இமயமலைக்கு போய் தியானம் பண்ணிட்டு கோபத்தை குறைச்சிக்கிட்டு திரும்பி வந்திருக்காராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.