Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உடை முதல் கேட்ஜெட் வரை: தீபாவளி ஷாப்பிங் கைடு!

தீபாவளி என்றாலே புத்தாடைகள், நகைகள், இனிப்புகள், வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள் என ஷாப்பிங் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இதோ இன்னும் 7 தினங்களில். முன்பெல்லாம் குடும்பத்துடன் கடைவீதிகளுக்குச் சென்று ஆடைகள் வாங்குவதுதான் பண்டிகைக்கால உற்சாகமாக இருந்தது. இப்போது பாரம்பரிய ஷாப்பிங்குடன் ஆன்லைன் விற்பனை, ஸ்மார்ட் கேட்ஜெட்கள், அழகுப் பராமரிப்புப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் எனப் பல புதிய தேர்வுகளும் இணைந்துவிட்டன.

2026 ஆம் ஆண்டின் தீபாவளி ஷாப்பிங்கில், டிரெண்டிங்கில் இருக்கும் பொருட்களை வாங்குவதுடன், அவற்றை எவ்வளவு பயனுள்ளதாகப் பயன்படுத்த முடியும் என்பதையும் கவனிப்பது அவசியம். பட்ஜெட்டுக்குள் அழகான புத்தாடைகளைத் தேர்வு செய்வது முதல் நீண்ட காலம் உழைக்கும் மின்னணுச் சாதனங்களை வாங்குவது வரை, இந்தத் தீபாவளிக்கான ஷாப்பிங் கைடு இதோ!

புத்தாடைகளில் பாரம்பரியமும் புதுமையும் தீபாவளி ஷாப்பிங்கில் முதன்மையான இடம் புத்தாடைகளுக்குத்தான். பெண்களுக்கு பட்டுச் சேலைகள், சாஃப்ட் சில்க், ஆர்கன்சா சேலைகள், அனார்கலி உடைகள், எம்பிராய்டரி குர்த்திகள் ஆகியவை தேர்வுகளாக இருக்கின்றன. பாரம்பரிய சேலையுடன் நவீன பிளவுஸ் அணிவது தோற்றத்துக்குப் புதுமை சேர்க்கும். அலுவலகம் மற்றும் நண்பர்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கோ-ஆர்டு செட்கள், இந்தோ-வெஸ்டர்ன் உடைகள் ஏற்றவை.

ஆண்களுக்கு குர்த்தா செட், லினன் சட்டைகள், நேர்த்தியான வேஷ்டி-சட்டை ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம். தற்போது வெல்-க்ரோ வேஷ்டிகள் இன்னும் அதீத குழந்தைகளுக்கு அழகான உடைகளுடன் எளிதில் அணிந்து விளையாடக்கூடிய வசதியான ஆடைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாம்.

இந்த ஆண்டு ஷாப்பிங்கில் ஒரு முக்கியமான விஷயம், ஒருமுறை அணிந்துவிட்டு அலமாரியில் வைக்கும் உடைகளைவிடப் பல நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தக்கூடிய உடைகளை வாங்குவது.

நகைகள், அணிகலன்கள்: குறைந்த செலவில் நிறைவான தோற்றம் பட்டுச் சேலைக்கு டெம்பிள் ஜுவல்லரி, சல்வாருக்கு ஆக்ஸிடைஸ்டு சில்வர் நகைகள், நவீன உடைகளுக்கு மினிமலிஸ்ட் காதணிகள் என உடைக்கு ஏற்ற அணிகலன்களைத் தேர்வு செய்யலாம். குறைந்த செலவில் தோற்றத்தை மாற்றுவதற்கு காதணிகள், வளையல்கள், நெக்லஸ் போன்றவை உதவும்.

தங்கம் வாங்கத் திட்டமிடுபவர்கள் அன்றைய தங்கத்தின் விலை, செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவற்றைக் கணக்கிட்ட பிறகே வாங்குவது நல்லது. தங்க முலாம் பூசப்பட்ட நகைகளை வாங்கும்போது அதன் தரம் மற்றும் பராமரிப்பு முறையையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக எக்ஸ்போக்கள், ஸ்டால்களில் வாங்கும் பொருட்களில் கவனம் அவசியம். தங்கம் கூடுமானவரை தீபாவளிக்குப் பிறகு வாங்குவது சேமிப்பாக இருக்கும்.

அழகுப் பராமரிப்பு: பண்டிகைக்கான சிறிய முதலீடு பண்டிகைக் காலத்தில் லிப்ஸ்டிக், காஜல், பிளஷ், மேக்கப் பேலட், பெர்ஃப்யூம், ஸ்கின்கேர் பொருட்கள் வாங்குவதிலும் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். 2026 ஆம் ஆண்டின் பண்டிகைக்கால ஆன்லைன் விற்பனையில் அழகுப் பராமரிப்புப் பொருட்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெறும் எனச் சந்தை ஆய்வுகள் கணிக்கின்றன.

புதிய பொருட்களை வாங்கும்போது சருமத்துக்கு ஏற்றவையா, காலாவதி தேதி என்ன, ஏற்கெனவே பயன்படுத்தும் பொருட்களுடன் பொருந்துமா என்பதைக் கவனிக்க வேண்டும். தேவையற்ற பல பொருட்களை வாங்குவதைவிட, தினசரி பயன்படுத்தும் சில தரமான பொருட்களைத் தேர்வு செய்வது பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக சருமத்தின் மீதான காஸ்மெட்டிக் பொருட்களில் விலை அவசியமல்ல. தரம்தான் அவசியம்.

வீட்டை அழகாக்கும் தீபாவளி ஷாப்பிங் தீபாவளிக்கு வீட்டை அலங்கரிப்பதும் ஷாப்பிங்கின் ஒரு பகுதியாகிவிட்டது. பித்தளை விளக்குகள், அலங்கார அகல் விளக்குகள், தோரணங்கள், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உருளிகள், எல்.இ.டி. விளக்குகள், வாசனை மெழுகுவர்த்திகள் போன்றவற்றை வாங்கலாம்.

வீட்டில் ஏற்கெனவே உள்ள பொருட்களுடன் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய அலங்காரப் பொருட்களை வாங்குவது செலவைக் குறைக்கும். மின்விளக்குகள் வாங்கும்போது தரச் சான்று, மின் பாதுகாப்பு, மின்சாரப் பயன்பாடு ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.

கேட்ஜெட் ஷாப்பிங்: என்ன வாங்கலாம்?

தீபாவளி விற்பனையில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், வயர்லெஸ் இயர்பட்ஸ், லேப்டாப், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட மின்னணுச் சாதனங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. ஆன்லைன் விற்பனையில் இந்தப் பொருட்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும், ஒவ்வொரு சாதனத்துக்கும் ஒரே அளவிலான தள்ளுபடி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

2026ஆம் ஆண்டுக்கான பண்டிகை விற்பனையில் அழகுப் பராமரிப்பு, வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள் போன்ற பிரிவுகளிலும் அதிக ஆர்வம் இருப்பதாகச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் மொபைல் மற்றும் சில மின்னணுச் சாதனங்களின் விலை உயர்வு விற்பனையைப் பாதிக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கேட்ஜெட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:

*பழைய சாதனத்தை மாற்றிக் கொடுக்கும் சலுகையுடன் சேர்த்துக் கிடைக்கும் இறுதி விலையைப் பாருங்கள்.

*வங்கி தள்ளுபடி, கேஷ்பேக், நோ-காஸ்ட் இ.எம்.ஐ. ஆகியவற்றின் நிபந்தனைகளைப் படியுங்கள்.

*புதிய மாடல் என்பதற்காக மட்டும் வாங்காமல், பேட்டரி, கேமரா, சேமிப்புத் திறன், உத்தரவாதம் ஆகியவற்றை ஒப்பிடுங்கள்.

*அதிகாரப்பூர்வ விற்பனையாளரிடம் வாங்குவது நல்லது.

பரிசுப் பொருட்கள்: வழக்கத்துக்கு மாறாக என்ன வாங்கலாம்?

தீபாவளிக்கு உறவினர்கள், நண்பர்கள், அலுவலக நண்பர்கள் எனப் பலருக்கும் பரிசளிக்க வேண்டியிருக்கும். வழக்கமான இனிப்புப் பெட்டிகளுடன் உலர் பழங்கள், தேநீர் பரிசுத் தொகுப்புகள், தனிப்பயனாக்கப்பட்ட புகைப்பட பிரேம்கள், வாசனை மெழுகுவர்த்திகள், சிறிய வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றையும் தேர்வு செய்யலாம்.

பரிசு வாங்கும்போது அதன் விலையைவிடப் பெறுபவருக்கு அது பயன்படுமா என்பதைக் கவனிப்பது முக்கியம். அலுவலகத்துக்கான பரிசுகள் என்றால் ஒரே மாதிரியான பொருட்களை மொத்தமாக வாங்குவது செலவைக்கட்டுப்படுத்த உதவும்.

- என். நிஷா