ஜப்பானில் கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கிய 20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது. நாகோயாவில் உள்ள பலோமா மிசுஹோ ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், வீரர்களின் அணிவகுப்பு உள்ளிட்டவை நடைபெறுகிறது. நிறைவு விழாவில் இந்திய தேசியக்கொடியை துப்பாக்கி சுடுதலில் 2 தங்கம் மற்றும் வெள்ளி என 3 பதக்கங்களை வென்ற நீரு தண்டா ஏந்திச்செல்கிறார். அவர் ஏற்கனவே இந்தியா திரும்பிவிட்ட நிலையில் மீண்டும் ஜப்பானுக்கு புறப்பட்டுச்சென்றார்.
அடுத்ததாக 21வது ஆசிய விளையாட்டு போட்டி கத்தார் நாட்டில் 2030ம் ஆண்டு நடைபெற உள்ளது. நிறைவு விழாவின் போது ஆசிய விளையாட்டு கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ கொடி கத்தாரின் தலைநகரான தோஹா நகரத்திடம் ஒப்படைக்கப்படும்.


