சென்னை: 2029ல் இந்திய பிரதமர் யார் என்பது தொடர்பாக தவெக, காங்கிரஸ் எம்எல்ஏ இடையே நேற்று வார்த்தை மோதல் நடந்தது.
‘ராகுலே விஜய்யை பிரதமர் நாற்காலியில் உட்கார வைப்பார்’: தவெக எம்எல்ஏ கனிமொழி
சென்னை தலைமைச் செயலகத்தில் தவெக கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது: 2029ல் பிரதமர் வேட்பாளர் தலைவர் விஜய் தான். தளபதிதான். 2025ல் நான் கணித்ததைப் போல 2026ல் விஜய் முதல்வரானார். 2026ல் இப்போது சொல்கிறேன் 2029ல் தமிழகத்திலிருந்து தான் பிரதமர் உருவாகப் போகிறார். 2029ல் இந்திய அரசியலில் மாற்றம் நிகழப்போகிறது. பிரதமரை இனி டெல்லியில் இருந்து முடிவு செய்யப்போவது இல்லை. ராகுல் காந்திதான் தளபதியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தார். அதேபோல் ராகுல் காந்தியே தலைவர் தளபதியை பிரதமராக அமர வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்
‘தவெக எம்எல்ஏக்கள் எல்லாம் ரசிக குஞ்சுகள்..’ காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட்
கனிமொழி எம்எல்ஏக்கு பதிலளித்து காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர் தாரகை கத்பட் அளித்த பேட்டி:
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ராகுல் காந்திதான். முதல்வர் விஜய் இதுவரை ராகுல் காந்திதான் பிரதமர் என்று கூறியுள்ளார். தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மனநிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலைவரைத்தான் சொல்வார்கள். ராகுல் காந்திதான் பிரதமர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எந்த சோர்வும் கிடையாது. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, இந்தியாவே இதுகுறித்து தெளிவாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.



