Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இலங்கை பவுலர் பெர்னாண்டோவுடன் மோதல்; ஜெய்ஸ்வால் அவ்வளவு நெருங்கி சென்றிருக்கக் கூடாதுதான்: இந்திய பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி

கொழும்பு:இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே 2வது டெஸ்ட் கொழும்பு மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் ஆட்டத்தின் போது இந்தியாவின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 45 ரன்னில், அசிதா பெர்னாண்டோ பந்தில் போல்டானார். இதையடுத்து பெவிலியன் திரும்பிய ஜெய்ஸ்வாலிடம், பெர்னாண்டோ ஏதோ செல்ல இருவருக்கும் மோதல் ஏற்பட்டது .ஒருவரையொருவர் முட்டிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமானது. தேவ்தத் படிக்கல் சமாதானப்படுத்த முயன்றும் ஜெய்ஸ்வால் கட்டுப்படாமல் பெர்னாண்டோவை நோக்கி ஆக்ரோஷமாகச் சென்றார். இதனால் மைதானத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ஜெய்ஸ்வாலின் இந்த செயலால் அவருக்கு அபராதம் அல்லது சில போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த விவகாரம் பற்றி முதல்நாள் ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கூறியதாவது: இந்தச் சம்பவம் “ஆட்டத்தின் பரபரப்பான சூழலில்” நிகழ்ந்த ஒன்று. ஜெய்ஸ்வால் பெர்னாண்டோவிடம் அவ்வளவு நெருங்கிச் சென்றிருக்கக் கூடாதுதான். ஆனாலும், அந்தத் தருணத்தின் வேகத்தில் அது நடந்துவிட்டது” என்றார்.

தேவ்தத் படிக்கல் சதம் பற்றி கூறிய கோடக், கிடைத்த வாய்ப்பை அவர் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் தனது வாய்ப்புக்காகக் காத்திருந்தார். அவர் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட விதமும், கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட விதமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. முதல்நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன் என்பதும் நல்ல ஸ்கோர் தான். தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால், 3 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று சொல்வேன்; என்றார் வீரர்கள் மோதல் குறித்து இலங்கை அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ரியான் வான் நீகெர்க் கூறுகையில், களத்தில் வெளிப்பட்ட வார்த்தைப் பரிமாற்றங்கள் உணர்ச்சியின் வெளிப்பாடாகவே இருந்திருக்கக்கூடும்; அது குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளும் பொறுப்பை நான் போட்டி நடுவரிடமே விட்டுவிடுகிறேன்,” என்றார்.

போட்டி நடுவர் எளிதில் விடமாட்டார்

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அஜய் ஜடேஜா கூறியதாவது: இது மிகவும் ஆபத்தான எல்லை. இதில் மாற்றுக்கருத்து இல்லை. உடல் ரீதியான தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. முந்தைய போட்டியில் ஜெய்ஸ்வால் ஃபீல்டிங் செய்த போது, நிரோஷன் டிக்வெல்லாவை வம்புக்கு இழுத்துப் பேசினார். வரம்புகளை மீறாத வரை இத்தகைய சீண்டல்கள் பரவாயில்லை என்று நாம் நினைப்போம். ஆனால், தன்னைப் பார்த்துப் பிறர் சிரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், மற்றவர்களைப் பார்த்து சிரிக்கக் கூடாது. திரும்பப் பெற முடியாத சீண்டல்களை நீங்கள் களத்தில் இருக்கும் போது மற்றவர்களிடம் கூறக் கூடாது. ஜெய்ஸ்வால் காட்டிய உடல் ரீதியான எதிர்வினை அவருக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும். போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் மிகவும் கடுமையானவர் என்பதால், தவறுகளைச் செய்யும் வீரர்களை அவர் எளிதில் விட்டுவிட மாட்டார், என்றார்.