Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட்: தமிழ்நாட்டில் 723 பேர் தேர்ச்சி

சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான (2025) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 979 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 22ம் தேதி அறிவித்தது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இதில் சுமார் 7 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். தமிழகத்தில் சுமார் 24 ஆயிரம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மே 25ம்தேதி நடந்தது. முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் 79 நகரங்களில் நடந்தது.

இந்நிலையில் முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட்டை 18மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளமான www.upsc.gov.in, www.upsconline.nic.inல் நேற்று மாலை வெளியிட்டது. இதுகுறித்து, சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் 14,156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 723 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்கள் அகாடமியில் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், டெல்லியில் பயின்ற 963 பேர் மாணவர்கள் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் எங்கள் அகாடமியில் படித்த 450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்குகிறது. இத்தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் 18 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.