ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒன்றிய பாஜ அரசு எரிபொருள் இருப்பை சேமிக்கவோ, அதற்கான வசதிகள் செய்வதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி பற்றாக்குறையை சமாளிக்கவோ நடவடிக்கை எடுக்காததன் விளைவை அப்பாவி இந்திய மக்கள் பெரிதும் அனுபவித்து வருகின்றனர்.
இந்தியாவை பொருத்தவரை 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் தேவையை வெளிநாடுகளில் இருந்தே கடல்வழி போக்குவரத்து வாயிலாக இறக்குமதி செய்கிறது. மார்ச் துவக்கத்தில் இப்போக்குவரத்து தற்காலிகமாக முடங்கியதால், இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வணிக சிலிண்டர் பற்றாக்குறையால் பெரும்பாலான உணவகங்கள் மூடுவிழா கண்டு விட்டன. பல லட்சம் கூலித்தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
எரிவாயு சார்ந்து செயல்படும் பெரும்பாலான தொழில்களையும் நடத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. நேற்றைய தெலுங்கு வருட பிறப்போடு சேர்த்து பல தனியார் பள்ளி, கல்லூரிகள் தங்களது விடுதிகளை மூடி தொடர் விடுமுறை அளித்துள்ளன. எரிவாயு தட்டுப்பாடே காரணமென்று அறிவித்தாலும், நிலைமை சரியாகாதபட்சத்தில் காலவரையற்ற முறையில் மூடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.
5 மாநில தேர்தல்களில் மட்டுமே தற்போது ஒன்றிய பாஜ அரசு பெருங்கவனம் எடுத்து வருகிறது. எரிவாயு பற்றாக்குறை தொடர்பாக எந்தவொரு வெள்ளை அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை. வணிக சிலிண்டர் மட்டுமே பற்றாக்குறை என கூறி வந்தாலும், வீடுகளிலும் சிலிண்டர் கிடைப்பதில் தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் 25 நாட்கள், கிராமப்புறங்களில் 45 நாட்கள் என அறிவிக்கப்பட்டாலும், வழக்கமான முறையில் காஸ் முன்பதிவு செய்ய முடிவதில்லை. வாட்ஸ்அப் வழி புக்கிங் தொடர்பாகவும், தெளிவான வழிமுறைகளை ஒன்றிய அரசு செயல்படுத்தவில்லை. இதனால் வீடுகளுக்கு சிலிண்டர் கிடைப்பதிலும் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. மேலும், யூரியா மற்றும் டிஏபி உரத்தேவையில் 50 சதவீதத்தை இந்தியா மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே பெற்று வருகிறது.
தற்போது இதற்கும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனை தவிர்க்க ரஷ்யா, பெலாரஸ் மற்றும் மொராக்கோ நாடுகளுடன் இந்தியா நீண்டகால திட்ட அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் நீடித்தால், வரும் மாதங்களில் பணவீக்கம் 0.8 சதவீதம் வரை அதிகரிக்கும். இதனால் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் ஒரு கோடி இந்தியர்களின் வேலைவாய்ப்புக்கும் சிக்கல் எழுந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க இந்திய பங்குச்சந்தையிலும் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 2,497 புள்ளிகள் சரிந்த நிலையில், நிப்டி 23,000 புள்ளிகளுக்கு கீழ் இறங்கியுள்ளயது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.11 லட்சம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சராசரி மனித வாழ்க்கை முதல் தேசத்தின் பொருளாதாரம் வரை மாபெரும் சரிவு ஏற்பட்டுள்ள இந்நேரத்தில், இதை சரி செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது.
ஆனால், இதுதொடர்பான மேம்போக்கான அறிக்கைகள், பேச்சுவார்த்தைகள் மட்டுமே ஒன்றிய பாஜ அரசு நடத்தி வருகிறதே தவிர, சரி செய்வதற்கான திட்டங்களை தீட்டவில்லை. இதே நிலை நீடித்தால் உணவுக்காகவும், வாழ்வாதாரத்துக்காகவும், நமக்கு நாமே சண்டையிட்டுக் கொள்ளும் நாள் வெகுதூரமில்லை என்றுதான் கூறவேண்டும்.
