Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சினிமா விஐபிக்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை சென்னையில் பிரபல சினிமா நடிகை கைது: தோழி உள்பட 7 பேரும் சிக்கினர்: கேரளா, பெங்களூரில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து விற்றதும் விசாரணையில் அம்பலம்

சென்னை: திரைப்பிரபலங்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் பிரபல சினிமா நடிகை மற்றும் அவரது தோழி, ஆண் நண்பர்கள் உட்பட 8 பேரை போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிராம் மெத்தாம்பெட்டமின், 18 கிராம் கஞ்சா, 1 ஸ்டாம், 6 கிராம் ஓஜி வகை கஞ்சா, ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பாவுக்கு வடபழனி, சாலிகிராம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சினிமா பிரபலங்களுக்கு அதிகளவில் மெத்தாம்பெட்டமின் உள்ளிட்ட உயர் ரக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மெத்தாம்பெட்டமின் பயன்படுத்திய நெசப்பாக்கம் ஓம் சக்தி நகர் 4வது தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன்(33) என்பவரை பிடித்து விசாரித்த போது, சென்னை கோவூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்குமார்(31) என்பவரிடம் இருந்து வாங்கியதாக கூறினார்.

உடனே வெங்கடேஷ் குமாரை பிடித்து விசாரித்த போது, அவர் தனது நண்பர்களான கோவூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா(31), காட்டுப்பாக்கம் சாமிநாத நகர் 1வது தெருவை சேர்ந்த யஷ்வந்த்(25) மூலம் போதை பொருள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. வெங்கடேஷ்குமார் மூலம் போலீசார் போதை பொருள் வேண்டும் என்று கார்த்திக் ராஜா மற்றும் யஷ்வந்த் ஆகியோரை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஆவின் பூத் அருகே வரவழைத்து மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து போதை பொருள் கடத்தி வந்த கார் மற்றும் 3 கிராம் மெத்தாம்பெட்டமின் 18 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு பிடிபட்ட 4 பேர் அளித்த தகவலின்படி மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி குறுக்கு தெருவை சேர்ந்த ஸ்ரீராம் நடராஜன்(33) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஓஜி வகை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அளித்த தகவலின் படி கோவிலம்பாக்கத்தில் வீடு எடுத்து தங்கி போதை பொருள் விற்று வந்த கேரளா மாநிலம் பாலக்காடு ஒட்டப்பாலம் பகுதியை சேர்ந்த விபின்ஷா(27) என்பரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ஒரு கிராம் மெத்தாம்பெட்டமின் பறிமுதல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து விபின்ஷா செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, வடபழனி கன்னியப்பன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சினிமா நடிகையான வின்சி நிவேதா(26) என்பவருக்கு உயர் ரக ஓஜி வகை கஞ்சா, மெத்தாம்பெட்டமின் கொடுத்ததற்கான ஆதராங்கள் சிக்கின. உடனே போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக வடபழனியில் உள்ள வின்சி நிவேதா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அவரது படுக்கை அறையில் இருந்து மெத்தாம்பெட்டமின் உள்ளிட்ட போதைப்பொருட்கல் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் நடிகை வின்சி நிவேதாவிடம் நடத்திய விசாரணையில், கேரளாவை சேர்ந்த தனது தோழியான அஞ்சு கிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து சினிமா பிரபலங்களுக்கு பெரிய அளவில் மெத்தாம்பெட்டமின் விற்று வந்ததும், இதற்காக வடபழனியில் பிரபல மருத்துவமனை எதிரே உள்ள அடுக்குமாடி குடிருப்பில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தனது ஆண் நண்பரான விபின்ஷா மற்றும் வெங்கடேசன் ஆகியோருடன் இணைந்து பெங்களூரு,

கேரளாவுக்கு சென்று மெத்தாம்பெட்டமின், ஓஜி வகை கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து தனது கேரளா தோழியான அஞ்சு கிருஷ்ணன் உதவியுடன் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருள் விற்று வந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடிகை வின்சி நிவேதா(26), அவரது தோழி அஞ்சு கிருஷ்ணா ஆகியோரை பிடித்தனர். இந்த போதை பொருள் அதிரடி வேட்டையில் சினிமா நடிகை, அவரது தோழி, ஆண் நண்பர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 6 கிராம் மெத்தாம்பெட்டமின், 18 கிராம் கஞ்சா, 1 ஸ்டாம், 6 கிராம் ஓஜி வகை கஞ்சா, ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நடிகையின் செல்போனை போலீசார் சோதனை செய்த போது, அவரிடம் ரெகுலராக போதைப்பொருள் வாங்கிய சக சினிமா பிரபலங்கள் பலர் சிக்கியுள்ளனர். இதனால் அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

* பட வாய்ப்பு குறைந்ததால் கஞ்சா வியாபாரியாக மாறிய நடிகை

சென்னை வடபழனி கன்னியப்பன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ேசர்ந்தவர் வின்சி நிவேதா(26). இவர் தர்மபுரியை பூர்வீகமாக கொண்டவர். எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தார். 2021ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். சினிமாவில் பெரிய நடிகையாக வர வேண்டும் என்று 4 ஆண்டுகளுக்கு முன்பு குறும்படம் எடுக்கும் இயக்குநர் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அந்த இயக்குநர் வின்சி நிவேதாவுக்கு மெத்தாம்பெட்டமின் போதைப்பொருளை இரவு நேரங்களில் கொடுத்து பழக்கப்படுத்தியுள்ளார்.

வின்சி நிவேதா சற்று அழகாக இருந்ததால், அந்த இயக்குநர் தனக்கு தெரிந்த இயக்குநர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த இயக்குநர்கள் மூலம் வின்சி நிவேதாவுக்கு சினிமாவில் நடிகைகளுடன் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளனர். அவர் திறமையாக நடித்ததால் வின்சி நிவேதாவுக்கு சிரிப்பு நடிகர் ஹீரோவாக நடித்த திரைப்படம், சீனா நாட்டின் தேசிய விலங்கு பெயரில் உள்ள திரைப்படம் உட்பட 15க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இருப்பினும், அவருக்கு போதிய வாய்ப்பு வராததாலும், அவருக்கு சினிமா இயக்குநர்கள் மூலம் பல தொந்தரவுகள் இருந்ததாலும், 2022ம் ஆண்டு கோடம்பாக்கத்தில் உள்ள டிவிஎஸ் கஸ்டமர் சர்வீசில் பணியாற்றியுள்ளார். பிறகு 2023ம் ஆண்டு தேனாம்பேட்ைடயில் உள்ள பிரபல முன்னனி கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். இதற்கிடையே புதிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

போதிய வருமானம் இல்லாததால் தனது கேரளா நண்பரான விபின்ஷா உதவியுடன் பெரிய அளவில் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருள் வியாபாரியாக வின்சி நிவேதா மாறியுள்ளார். அதன் மூலம் பல லட்சம் சம்பாதித்துள்ளார். போதை பொருள் யார் யாருக்கு விற்பனை செய்ய வேண்டும். போலீசாரிடம் சிக்காமல் எப்படி விற்பனை செய்ய வேண்டும் என வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடை ‘மீட்டிங்’ போடுவதற்காகவே நடிகர் வின்சி நிவேதா வாடகைக்கு எடுத்துள்ளார்.

அந்த வீட்டில் கேரளாவை சேர்ந்த தனது தொழில் பாட்னரான அஞ்சு கிருஷ்ணன் என்பவரை தங்க வைத்து அவர் உதவியுடன் யாருக்கும் சந்தேகம் வராதபடி சினிமா பிரபலங்களுக்கு உயர் ரக கஞ்சா, மெத்தாம்பெட்டமினை நடிகை வின்சி நிவேதா விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.