Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சினிமாவில் புதுமைகளை புகுத்திய இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு

சென்னை: இந்திய திரையுலகின் மிக மூத்த இயக்குனர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாச ராவ்(95). நேற்று இரவு வயது மூப்பு காரணமாக காலமானார். கடந்த 1931ம் ஆண்டு செப்டம்பர் 21ம் நாள் ஆந்திரபிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள உதயகிரியில் பிறந்த சிங்கீதம் சீனிவாசராவ் சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றார். 1950களில் புகழ்பெற்ற இயக்குனர் கே.வி. ரெட்டியிடம் ‘மாயாபஜார்’ (1957) போன்ற திரைப்படங்களில் இணை இயக்குனராக பணியாற்றினார்.

1972ல் ‘நீதி நிஜாயதி’ தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 1974ம் ஆண்டு தமிழில் ‘திக்கற்ற பார்வதி’ என்ற படத்தை இயக்கினார். தொடர்ந்து, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் 60 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். குறிப்பாக, தமிழில் கமல்ஹாசனை வைத்து ‘ராஜபார்வை’, அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல், மதன, காம, ராஜன்’, ‘காதலா காதலா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களையும் ‘லிட்டில் ஜான்’ போன்ற வித்தியாசமான கதை கொண்ட படங்களையும் ‘சன் ஆஃப் அலாவுதீன்’,

‘கடோத்கஜ்’ போன்ற அனிமேஷன் படங்களையும் இயக்கியுள்ளார். 2013ம் ஆண்டு வெளியான ‘வெல்கம் ஒபாமா’ என்ற படத்தை இயக்கிய சிங்கீதம் சீனிவாசராவ் பின்னர்வயது மூப்பு காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். சினிமா மீதான ஆர்வத்தால் மீண்டும் 2022ம் ஆண்டு ‘பிரதீபிம்பலு’ படத்தை இயக்கிய அவர் அண்மையில் தனது 94 வயதில் ‘சிங்கீதம்’ என்ற புதிய இசை திரைப்படத்தை இயக்கினார்.

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்குனர் மட்டுமல்லாமல் திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் நடிகராகவும் சினிமாவில் முத்திரை பதித்துள்ளார். திரைத்துறையில் புதுமைகளை புகுத்தியதற்காக ‘திக்கற்ற பார்வதி’ மற்றும் ‘புஷ்பக விமானா’ ஆகிய படங்களுக்கு 2 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும் நந்தி விருது, தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2011ம் ஆண்டில் பிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (FFI) சார்பில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.  உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிங்கீதம் சீனிவாச ராவ் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவு திரை உலகிற்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.