Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பதுக்கல் வியாபாரிகளால் குமரியில் எகிறியது சிகரெட் விலை: தங்கம் போல் ஒரு நாளைக்கு இருமுறை உயர்வு

நாகர்கோவில்: குமரியில் பெரு வியாபாரிகளின் பதுக்கல் காரணமாக சிகரெட் விலை அதிகபட்ச சில்லறை விற்பனையை விட பாக்கெட்டிற்கு ரூ.20 வரை உயர்ந்து விற்பனை ஆகிறது.

ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் ஆகும். அப்போது ஒரு மாதத்திற்கு முன்பே செயற்கையாக சிகரெட் தட்டுப்பாடு உருவாக்கப்படும். இதனால் மொத்த வியாபாரிகளிடம் இருந்து சிகரெட் வாங்க சில்லறை வியாபாரிகள் போட்டி போடுவதும், இதன் காரணமாக சிகரெட் விலையை மொத்த வியாபாரிகள் முதல் சில்லறை வியாபாரிகள் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதும் வழக்கம். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக சிகரெட் விலை உயர்த்தப்படவில்லை.

கடந்தாண்டு புகையிலை பொருட்கள் மீது வரி அதிகரித்த போதிலும் சிகரெட் விலை உயரவில்லை. இந்நிலையில், ஒன்றிய அரசு சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது வரி விதிப்பை அதிகளவில் உயர்த்தும் என தகவல் பரவியது. இதனையடுத்து, குமரியில் கடந்த 3 நாட்களாக பிரபல பிராண்டுகளின் சிகரெட் விநியோகஸ்தர்களுக்கு வரத்து குறைந்தது. இதனால் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை கடை வியாபாரிகள் கூடுதல் விலைக்கு சிகரெட்டுகளை வாங்கி வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு விநியோகஸ்தர்களிடம் இருந்து வாங்கி விற்கும் மொத்த வியாபார கடைகளில் ரூ.91க்கு விற்ற அதிக நுகர்வு உடைய பிரபல பிராண்ட் சிகரெட் பாக்கெட் 3 நாட்களில் 4 முறை விலை உயர்ந்து அதிக ட்ச சில்லறை விற்பனை விலையான ரூ.100க்கு மொத்த விற்பனை கடைகளில் விற்பனையானது.

இதுபோல், ரூ.75க்கு விற்பனை ஆன மற்றொரு சிகரெட் பாக்கெட் ரூ.80க்கும், ரூ.156க்கு விற்பனை ஆன கிங் சைஸ் சிகரெட் ரூ.175க்கும், அதிக மூவிங் இல்லாத மின்ட் சேர்ந்த சிகரெட் ரூ.86ல் இருந்து ரூ.91க்கும் (இதன் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.100), பிரபலம் இல்லாத சிகரெட்டுகள் கூட ரூ.55ல் இருந்து ரூ.58க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில சில்லறை விற்பனையாளர் வாங்கும் விலையில் இருந்து எப்போதும் கிடைக்கும் விலைக்கு விற்றாலும், சில சில்லறை வியாபாரிகள் தங்கள் பங்கிற்கு 10 எண்ணம் கொண்ட பிரபல சிகரெட் பாக்கெட் விலையை ரூ.120 என பாக்கெட்டிற்கு ரூ.20 லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து கோட்டாறை சேர்ந்த மொத்த வியாபாரியிடம் கேட்டபோது, சிகரெட் விலை உயரலாம் என தகவல் பரவியதை அடுத்து, விநியோகஸ்தர்களுக்கே சிகரெட் பண்டல்கள் வரத்து குறைந்து விட்டது.

அவர்கள் தங்களிடம் வாங்கும் பெரு வியாபாரிகளுக்கு வழக்கமான விலையில் விற்பனை செய்தாலும், விற்பனை செய்யும் பண்டல்களின் அளவை கணிசமாக குறைத்து விட்டனர். இதனால் ஒன்றிய அரசு முறைப்படி வரி அதிகரிப்பு, விலை உயர்வு போன்றவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கூட வழக்கமான விலையை விட அதிக விலை கொடுத்து சிகரெட் பண்டல்கள் வாங்கி வருகிறோம். தங்கம் விலை போல், கடந்த 3 நாட்களில் ஒரே நாளில் இருமுறை கூட விலை உயர்ந்தது. எங்களிடம் இருப்பு இருக்கும் பிராண்டுகளை வழக்கமான விலைக்கு விற்றாலும், இருப்பு முடிந்து புதிய பண்டல்கள் வாங்கும்போது வழக்கமான எங்களின் லாபத்தை கணக்கிட்டு சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறோம்.

ஆனால், ஒரு சில வியாபாரிகள் ஒரு சிகரெட்டிற்கு ரூ.2ம் 10 எண்ணம் கொண்ட பாக்கெட்டிற்கு ரூ.20ம் லாபம் கிடைக்கும் வகையில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இனிமேல், அரசு வரியை உயர்த்திய பின்னர், புதிய அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை குறிப்பிட்டு, சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வரும்வரை, விலை இனி உயராமல் தே நிலையில் நீடிக்கலாம் என நினைக்கிறோம் என்றார். இதற்கு முன்பு கொரோனா ஊரடங்கின்போது, வியாபாரிகளால் அதிகபட்ச விலையை விட பல மடங்கு கூடுதல் விலைக்கு சிகரெட் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.