Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: 14ம் தேதி தேரோட்டம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 14ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தார். 3.30 மணியளவில் கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.

கொடிமரம் மற்றும் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து காலை 5.30 மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பேரிதாடனம் நடைபெறுகிறது. பின்னர் 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். இரவு 9 மணிக்கு யாகசாலை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு விழாவின் 2ம் நாளான நாளை அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

மாலை கற்பக விருட்ச வாகனம், தொடர்ந்து தினமும் காலை, மாலை சிம்ம, யாளி, இரட்டை பிரபை, கருட, சேஷ அனுமந்தம், தங்க ஹம்சம், யானை வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 14ம் தேதி காலை நடைபெறுகிறது. 15ம் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. 16ம் தேதி ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.