புவனேஷ்வர்: ஒடிசாவில் அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில், ‘‘சிட் பண்ட் மோசடி விசாரணை தொடர்பாக வெல்பேர் பில்டிங்ஸ் அண்ட் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநர்களுடன் தொடர்புடைய விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஐந்து இடங்களில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 5ம் தேதி புவனேஷ்வர் மண்டல அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏ மல்லா விஜய பிரசாத், வரஹ ராமகிருஷ் சத்ய ஸ்ரீனிவாச ராவ் அல்லா மற்றும் பிறரின் வளாகங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது ரூ.1.01 கோடி மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பல்வேறு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், பொருட்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு சொந்தமான ஆறு உயர்தர சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 182 வங்கி கணக்குகளை முடக்குவதற்கான உத்தரவுகளையும் அமலாக்கத்துறை பிறப்பித்துள்ளது.



