Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சீட்டுக்கு 6 கோடி வரை வசூல் நடப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நம்பி வந்து ஏமாந்துட்டோமே என அதிபரின் அணி மகளிர்கள் முணுமுணுப்புதான் அதிகமாக கேட்குதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘குட்டி பிரான்ஸ் எனப்படும் தென் யூனியனில் லாட்டரி அதிபர், நடிகர் கட்சிகளின் வரவால் மாஜி பிரதிநிதிகள் மகிழ்ச்சியில் இருந்தார்களாம்.. எல்லா செலவுகளையும் அவங்க பார்த்துகுவாங்க என்ற நம்பிக்கைதான் இதுக்கு காரணமாம்.. ஆனால் டெல்லி ஷாவின் திடீர் அழுத்தம் காரணமாக புல்லட்சாமியிடமிருந்து அதிபரிடம் சரணடைய ஓட்டம் பிடித்திருந்த பிரபலங்கள் எல்லாம் விழிபிதுங்கி நிற்கிறார்களாம்.. தங்களுக்கும் சீட்டும் கிடைக்காது, மற்ற கட்சிக்கு தாவினாலும் மவுசு இருக்காது என்ற வளையத்தில் சிக்கி உள்ளார்களாம்.. இதேபோல்தான் நடிகர் கட்சியில் இணைந்துள்ள மாஜிக்களும் அச்சத்தில் இருக்கிறார்களாம்.. மதசார்பற்ற ஓட்டுகளை சிதறடிக்கும் வகையில் போடப்பட்ட சில வியூகங்கள் எல்லாம் தலைகீழாக மாறி வருவதால் மலராத கட்சியும் குழப்பத்தில் உள்ளதாம்.. அதிபர் கட்சியில் 6 சீட் என்ற உத்தரவாதத்தால் அதிகளவில் மகளிர்கள் ஐக்கியமாக இருந்த நிலையில், புதுகூட்டணியால் கட்சிக்கே 2, 3 சீட் கிடைப்பதே திண்டாட்டம் என்பதால் நம்பி வந்து ஏமாந்துட்டோமே என்ற முணுமுணுப்பை அக்கட்சியில் பரவலாக கேட்க முடிகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று இலைக்கட்சி தலைவர் சொன்ன பிறகுதான் மாவட்ட செயலாளர் ஒருத்தர் சீட்டுக்கு ஆறு சி வரை வசூல் வேட்டை நடத்துறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாமென இபிஎஸ் அறிக்கை வெளியிட்ட பிறகும், ஒரு எம்.எல்.ஏ. சீட்டிற்கு ஆறு கோடி ரூபாய் வசூல் நடக்கிறதாம்.. சாரல் மாவட்டத்தில் இலைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் ‘எனக்கு மலர் கட்சி மாநிலத் தலைவர் நெருங்கிய உறவு, அவரிடம் சொல்லி சீட் வாங்கித் தர்ரேன்னு’ இலைக் கட்சி நிர்வாகிகளிடம் வாக்குறுதி கொடுத்தாராம்.. சாரல் மாவட்டத்தின் இன்னொரு மாவட்டச் செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியாதபடி மலர் கட்சி நடிகர் அல்லது சைக்கிள் கட்சி பிரபலத்தை சாரல் மாவட்ட தலைநகரில் போட்டியிட வைக்க பேசி முடித்து விட்டார்களாம்.. சாரல் மாவட்ட எம்பி தொகுதியில் ஐடி கம்பெனி நிர்வாகியின் ஆனந்த நண்பருக்கு சீட் கொடுக்க விடாமல் செய்தது போன்று, இந்த தடவை வாசு தொகுதியில் சீட் கொடுக்க கூடாதுன்னு மலர்க்கட்சி மாநில தலைவர் இலைக் கட்சி மாவட்டச் செயலாளர் ஒப்பந்தம் போட்டுள்ளனராம்.. வாசு வேட்பாளர் நீங்கதான் என்று இலைக் கட்சி பிரபலமான குவாரி அதிபருக்கு உறுதி கொடுத்துள்ளாராம்.. கோவில் தொகுதியில நீங்கதான் எம்.எல்.ஏ. என்று தூத்துக்குடிக்கு குருபூஜைக்கு போன இடத்தில் குருபூஜை தலைவரின் மகளுக்கு வாக்கு கொடுத்து விட்டு வந்தாராம் மாவட்டம். ரெண்டு தொகுதிக்கும் இலைக்கட்சி சார்பில் வேட்பாளரை ரெடி செய்து விட்ட மாவட்டம், தன்னிடம் பேசும் நிர்வாகிகள் எல்லாரிடமும் ஆறு கோடி கொடுங்க, சீட் ரெடி என்று வசூல் நடத்துகிறாராம்.. தனது சகோதரர் ஐகோர்ட் ஜட்ஜ் ஆகப்போறாரு. மலர் கட்சி தேசிய தலைவர்கள் வரும்போது, மலர்கட்சி மாநில தலைவர் வீட்டில் ஒரே டேபிளில் வருங்கால ஐகோர்ட் ஜட்ஜ் உட்கார்ந்து உணவருந்தினார்.. அந்தக் கணக்கில்தான் மலர் கட்சி மேலிடம் மூலம் சீட் வாங்கித் தருகிறேன் என்று இலைக் கட்சியின் சாரல் மாவட்டம் வசூல் வேட்டையை நடத்துகிறாராம்.. ‘அமைச்சர் அப்பா பேரைக் கெடுக்க வந்த ஸ்மால் அப்பா இவரு’ என்று சாரல் மாவட்ட இலைக்கட்சியினர் புலம்புகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எண்ணெயில் ஒட்டாத தண்ணீர்போலவே இலைக்கட்சி, மலராத கட்சி கூட்டணி தொடருதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மலராத கட்சியுடன், இலைக்கட்சி கூட்டு சேர்ந்தாலும் கூட தூங்கா நகரில் இது எண்ணெய்யில் ஒட்டாத தண்ணீராகவே இருக்கிறதாம்.. எம்பி தேர்தலில் தங்களைப் பீட் செய்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய மலராத கட்சி மீது இலைக்கட்சி நிர்வாகிகளுக்கு எப்போதும், இப்போதும் கொப்பளிக்கும் ஆத்திரமிருக்கிறதாம்.. அதேபோல, மலராட கட்சியும் இலைகள் மீது சமீபகாலமாக அதிருப்தியில் இருக்கிறார்களாம்.. குன்றத்து பிரச்னையை வைத்து குளிர்காய நினைத்து மலராத கட்சி ஆட்டம் போட்டபோது, ஆரம்பத்தில் கைகோர்த்த இலைக்கட்சியினர் பின்னாளில் மக்களிடம் செல்வாக்கு இழக்கும் சூழ்நிலையறிந்து அடக்கி வாசிக்க தொடங்கியதால், மலராத கட்சியினர் அதிருப்தி அடைந்திருக்கிறார்களாம்.. மேலும், பிரதமர் வருகைக்கென போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுக்க மலராத கட்சியினரின் அழுத்தத்தால் வந்தவர்களில், இலைக்கட்சியின் மாஜியான தெர்மோகோல்காரரின், ‘அவங்க கொடுத்த மனுவுக்கு நாங்களும் கூடப்போயி ‘ஸ்வாஹா’ பாடிட்டு வந்திருக்கோம்’ என்று வெளிப்படையாகவே கேலி பேசியதும், பிரதமர் வருகை மாறிப்போனதும் கூட மலராத கட்சியினரிடம் கோபத்தை கூடுதலாக்கி இருக்கிறதாம்.. மோடி பொங்கல் அறிவிப்பிற்கு போட்டியாக எடப்பாடி பொங்கலென அறிவித்திருப்பதற்கும் மலராத கட்சியினரிடம் வருத்தம் வளர்ந்திருக்கிறதாம்.. இதையெல்லாம் கடந்து இலைக்கட்சி நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தொகுதிகளை எல்லாம் குறிவைத்து பறிக்கும் வகையில் மலராத கட்சி சீட் கேட்டு வற்புறுத்தி வருவதும் இலைக்கட்சி நிர்வாகிகளிடம், மலராத கட்சி மீது கசப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறதாம்.. மொத்தத்தில் எப்போது வேண்டுமானலும் நொறுங்கிப்போகும் நிலை கொண்டிருக்கிறதென இருகட்சி நிர்வாகிகளுமே எதிர்பார்த்துக் காத்திருப்பதையும் அறிய முடிகிறது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கட்சி மாறி வந்தவர்களுக்கு தான் மரியாதையா? போராட்டம், மறியல், சிறைக்கு சென்று வந்தவங்களுக்கு இவ்ளோதானா மரியாதை என மலராத கட்சியில் குமுறுகிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மான்செஸ்டர் மாவட்டத்தில் தமிழகத்தில் மலராத கட்சியில் நீண்ட நாட்களாக இருக்கும் நபர்களைவிட, வேறு கட்சியில் இருந்து, இக்கட்சிக்கு தாவி வந்தவர்களுக்குத்தான் அதிக மரியாதை கொடுக்கிறார்களாம்.. இதனால், மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.. இலைக்கட்சியில் இருந்து, மலராத கட்சிக்கு தாவி வந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர், ‘எனக்கு கோவை வடக்கு தொகுதி...தான் வேண்டும்...’ என அடம்பிடிக்கிறாராம்.. இதேபோல், மாற்று கட்சியில் இருந்து மலராத கட்சிக்கு வந்த விவசாயி அணியை சேர்ந்த ஒருவர் ‘எனக்கு சிங்காநல்லூர் தொகுதிதான் வேணும்..’ என மல்லுக்கட்டுகிறாராம்.. இருவருமே, ‘மேலிடம் எத்தனை ‘சி’ கேட்டாலும் அதை கொடுக்க நாங்கள் தயார்..’ என்கிறார்களாம்.. அதனால், உண்மையாக உழைத்து, கட்சிக்காக மறியல் போராட்டம் நடத்தி, பலமுறை சிறை சென்ற தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களுக்கு சீட் தராமல் தண்ணீ... காட்டி விடுவார்களோ.. என்ற அச்சத்தில் இருக்கிறார்களாம்.. எப்படி இருந்தாலும், வேறு கட்சியில் இருந்து நம்ம கட்சிக்கு தாவி வந்தவர்களுக்குத்தான் கட்சியின் மேலிடம் மரியாதை கொடுக்கிறது..’’ என புலம்பி தள்ளுகிறார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.