Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: நேபாளம் திரிசூலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திரிசூலி: சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திபெத் அணை உடைந்ததை தொடர்ந்து, நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நேபாளத்தின் போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 469 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாயமான 1,500க்கும் மேற்பட்டோரை தேடி வருவதாக போலீசார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தின் லாங்சாங் நகரில் ரிக்டர் அளவில் இன்று 5.1 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் தீவிர தாக்கத்தால், எல்லைப் பகுதியான திபெத் பகுதியில் இருந்த அணை மீண்டும் திடீரென உடைந்தது. இதனால் அங்கிருந்து பெருக்கெடுத்து ஓடிவரும் அதிகளவிலான தண்ணீர் காரணமாக, நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் நீர்மட்டம் அபாயகரமான அளவுக்கு மளமளவென உயர்ந்து வருகிறது. இதையடுத்து திரிசூலி மற்றும் நுவாகோட் பகுதி மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் அவசர எச்சரிக்கை விடுத்து வெளியேற்றி வருகின்றனர்.

அங்கு நடந்து வந்த திரிசூலி-ரசுகா சாலை சீரமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு, வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து நேபாள போலீஸ் அதிகாரி பி.சவுத்ரி கூறுகையில், ‘ஆற்றில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் இருந்த வாகனங்கள் அனைத்தும் திருப்பி வரவழைக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இனிவரும் நேரங்களில் இதைவிட மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.