சில்லிபாயிண்ட்...
* உலக கோப்பை செஸ் எரிகைசி போட்டி டிரா
பனாஜி: ஃபிடே உலக கோப்பை செஸ் போட்டியில் நேற்று, 4வது சுற்றின் முதல் போட்டியில் அர்ஜுன் எரிகைசி, ஹங்கேரி வீரர் பீட்டர் லீகோவுடன் மோதி டிரா செய்தார். மற்றொரு போட்டியில், ஹரி கிருஷ்ணா - சுவீடன் கிராண்ட் மாஸ்டர் நில்ஸ் கிராண்டெலியஸ் இடையிலான போட்டியும் டிராவில் முடிந்தது. இந்திய கிராண்ட் மாஸ்டர் கார்த்திக் - வியட்நாம் வீரர் லே குவாங் லியம் இடையிலான போட்டி 36 நகர்த்தல்களில் டிரா ஆனது. தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் டேனியில் டுபோவ் இடையிலான போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த பிரக்ஞானந்தா கடைசி நேரத்தில் சாமர்த்தியமாக டிரா செய்தார்.
* மாஸ்டர்ஸ் பேட்மின்டன் நைஷா கவுர் தோல்வி
குமாமோடோ: குமாமோடோ மாஸ்டர்ஸ் ஜப்பான் பேட்மின்டன் தகுதிச் சுற்றுப் போட்டியில் நேற்று, இந்திய வீராங்கனை நைஷா கவுர் படோயே (17), நியூசிலாந்தின் ஷானா லி உடன் மோதினார். போட்டியின் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஷாலா லி, 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். இப்போட்டி வெறும் 32 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில் இந்திய தரப்பில் யாரும் ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் லக்சயா சென், எச்.எஸ்.பிரணாய் இன்று நடக்கும் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் ஆடவுள்ளனர்.
* உலக துப்பாக்கி சுடுதல் சாம்ராட்டுக்கு தங்கம்
கெய்ரோ: உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் எகிப்தின் கெய்ரோ நகரில் நடந்து வருகின்றன. ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சாம்ராட் ராணா பங்கேற்றார். 8 பேர் மோதிய போட்டியில் சாம்ராட் அற்புதமாக செயல்பட்டு 423.7 புள்ளிகள் பெற்றார். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்ற அவர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இப்போட்டியில் சீனாவின் ஹூ காய் வெள்ளிப் பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் வருண் தோமர் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். உலக துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியா இதுவரை 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.