* ஷ்ரேயாஸ் ஐயர் டிஸ்சார்ஜ் ஆனார்
சிட்னி: ஆஸ்திரேலியா அணியுடன் ஒரு நாள் போட்டியில் ஆடியபோது விலா எலும்பில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் ஐசியு பிரிவிலும் பின் சாதாரண பிரிவிலும் சேர்க்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை வேகமாக குணமடைந்து வருவதாகவும் பிசிசிஐ மருத்துவர் குழு உடன் இருந்து கவனித்து வருவதாகவும், பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக குணமடைந்த பின், அவர் இந்தியா திரும்புவார் என்றும், மீண்டும் போட்டிகளில் ஆட 2 மாதங்கள் ஆகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
* செஸ் உலக கோப்பைக்கு ஆனந்த் பெயர்
பாஞ்சிம்: கோவாவில் ஃபிடே செஸ் உலக கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெறும் வீரருக்கு வழங்கப்படும் கோப்பை பித்தளையால் செய்யப்பட்டு தங்க பிளேட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கோப்பைக்கு, 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோப்பையை அறிமுகம் செய்யும் விழா, நேற்று முன்தினம் நடந்தது. அதில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ஃபிடே தலைவர் அர்காடி ட்வோர்கோவிச் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
* ஸ்குவாஷ் செமிபைனலில் சென்னையின் ராதிகா
காஃப்ஸ் ஹார்பர்: ஆஸ்திரேலியாவின் காஃப்ஸ் ஹார்பர் நகரில் நார்த் கோஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் நடந்து வருகின்றன. ரூ.5.30 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இப்போட்டிகளின் காலிறுதி ஒன்றில், சென்னையை சேர்ந்த இந்திய வீராங்கனை ராதிகா சுதந்திர சீலன், ஹாங்காங் வீராங்கனை போபோ லாம் உடன் நேற்று மோதினார். முதல் செட்டை 11-13 என்ற புள்ளிக் கணக்கில் ராதிகா இழந்தபோதும், அடுத்த 3 செட்களையும் 11-4, 14-12, 12-10 என்ற புள்ளிக் கணக்கில் அசத்தலாக வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
