குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கேக்குகள் வழங்க ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை
சென்னை: குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை /உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆக மொத்த பயனாளிகள் 61,84,566 எண்ணிக்கைக்கு கேக்குகள் (Cake) வழங்க ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இப்பணியானது கீழ்க்கண்ட தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.
* 10.11.2026-க்குள் விற்பனையாளர்கள் 38 மாவட்டங்களிலும் உள்ள TNCSC கிடங்குகளில் கேக்குகளை ஒப்படைப்பர்.
* 10.11.2026-க்குள் பாடநூல் கழகம் மூலம் வாழ்த்து அட்டைகள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வந்து சேரும்.
* 11 மற்றும் 12.11.2026 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளிலிருந்து பள்ளிகளுக்குக் கேக்குகள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து வாழ்த்து அட்டைகள் கொண்டு செல்லப்படும்.
* 13.11.2026 அன்று பயனாளிகள் அனைவருக்கும் கேக்குகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் வாழ்த்து அட்டைகளை வழங்க வேண்டும்.
* மயிலாடுதுறை, சேலம், தஞ்சாவூர், மதுரை, திருவண்ணாமலை, மற்றும் திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு மாணவருக்கு ட்ரீம் கேக்ஸ்/விங்கீஸ் தயாரிப்பு 25 கிராம் உள்ள 2 மினி ஸ்விஸ் ரோல் பாக்கெட்டுகள்.
* கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு மாணவருக்கு ஐடிசி தயாரிப்பு 21.6 கிராம் உள்ள 2 மினி கேக் பாக்கெட்டுகள்.
* மற்ற மாவட்டங்களில் ஒரு மாணவருக்கு ட்ரீம் கேக்ஸ்/விங்கீஸ், பிரிட்டானியா, எலைட் தயாரிப்பு 45 கிராம் உள்ள ஒரு பாக்கெட் வழங்கப்படும்.
* 13.11.2026 அன்று கேக்குகளை மாணவர்கள், ஆசிரியர்கள், SMC ஆசிரியர் உறுப்பினர்கள். ஆசிரியரல்லாப் பணியாளர்கள் என அனைவருக்கும் வழங்க வேண்டும்.
* உணவு ஒவ்வாமை அல்லது உணவுக் கட்டுப்பாடு உள்ள மாணவர்களை முன்கூட்டியே கண்டறிந்து தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
* மாணவர்கள் கைகளைக் கழுவிய பின்னர் பெற வேண்டும்: விநியோகம் ஒழுங்காகவும் சமமாகவும் நடைபெற வேண்டும்; எந்த மாணவரும் விடுபடக்கூடாது.
* கேக் உறைகளைக் குப்பைத் தொட்டிகளில் சேகரித்து, வளாகத்தைத் தூய்மையாக வைக்க வேண்டும்.
உரிய நாளன்று வருகை புரியாத மாணவர்களுக்கான கேக்குகளைப் பாதுகாப்பாக வைத்து, அவர்கள் பள்ளி வரும் நாளில் வழங்க வேண்டும்.
* அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து அட்டை கிடைத்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
* விநியோகம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைப் பள்ளியில் பராமரிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களின் படி இத்திட்டத்தைத் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்திக் கண்காணித்து, ஒவ்வொரு நிலையிலும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்து, 13.11.2026 அன்று அனைவருக்கும் கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வெற்றிகரமாக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறும், இப்பணிகளில் எவ்வித புகார்களுக்கு இடந்தராத வகையில் செயல்பட வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


