இன்றைய பெற்றோர்களின் மிகப் பெரிய கவலை—“குழந்தை சாப்பிடுறானா?” என்பதிலிருந்து “என்ன சாப்பிடுகிறான்?” என்பதற்கு மாறி வருகிறது. இதில் அந்த காலத்தில் ஸ்நாக்ஸ் பாக்ஸ் என்கிற பழக்கமே கிடையாது அதனால் ஓரளவிற்கு ஜங்க் உணவுகள், ஈஸ்ட் கலக்கப்பட்ட பிஸ்கட்டுகள், உடனடி மேகி, பாஸ்தா, கேக், இவை ஒரு எல்லையில் வைக்கப்பட்டிருந்தன. அல்லது வார இறுதியில் யாராவது விருந்தினர்கள் வந்தால் மட்டுமே கிடைக்கும். ஆனால் கடந்த 20 வருடங்களாக தனியார் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் ஸ்னாக்ஸ் பாக்ஸ் திறந்தால், அதில் நிறைந்திருப்பது சத்தான உணவுகள் அல்ல, நிறமூட்டும் ரசாயனங்கள், அதிக சர்க்கரை, உப்பு, நிறைந்த சிப்ஸ், பிஸ்கட், கேக், டோனட் இவைதான்... குழந்தைகளின் ஸ்னாக்ஸ் பாக்ஸில் என்னதான் நடக்கிறது?
காலையிலே அவசரத்தில் தயாரிக்கப்படும் ஸ்நாக்ஸ் பாக்ஸ்களில், பெரும்பாலும் இடம் பிடிப்பவை சிப்ஸ், சாக்லேட், நூடுல்ஸ், பாஸ்தா, பிஸ்கட், ஜூஸ் பாக்ஸ் போன்றவை. இவை சுலபமாக கிடைப்பதாலும், குழந்தைகள் விரும்புவதாலும் பெற்றோர்கள் அதைக் கொடுத்து அனுப்புகின்றனர். பிஸ்கட்டுகளை கொடுத்து வயிற்றை நிரப்பி விட்டு பின்னர் மதிய உணவு டப்பா சாப்பிடாமல் அப்படியே வருகிறது என்றால், வரத்தான் செய்யும் என்கின்றனர் உலக ஊட்டச்சத்து ஆர்வலர்கள்.
அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் குழந்தைகளில் உடல் எடை அதிகரிப்பு, பல் சேதம், மற்றும் இன்சுலின் சமநிலைக்கோளாறு போன்றவற்றை ஏற்படுத்தும். அதேபோல், அதிக உப்பு மற்றும் எண்ணெய் கலந்த ஸ்நாக்ஸ், சிறு வயதிலேயே ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பல பெற்றோர்கள் ஒரு நாள் ஒரு பாக்கெட் சிப்ஸ் தான்” என்று நினைக்கிறார்கள். ஆனால் அந்த ‘ஒரு பாக்கெட்’ தினசரி பழக்கமாக மாறும்போது, அது குழந்தையின் உணவு பழக்கத்தையே மாற்றிவிடுகிறது.
உதாரணத்திற்கு ஒரு நாய் அல்லது பூனையை எடுத்துக் கொள்வோம். தொடர்ச்சியாக கமர்சியல் உணவு கொடுக்கும் பொழுது வீட்டில் கொடுக்கப்படும் தயிர் சாதம், பால் சாதம், அசைவ உணவுகளை செல்லப் பிராணிகள் தவிர்த்துவிடும். விலங்குகளுக்கு இந்த நிலை எனில் தொடர்ந்து கமர்சியல் உணவுகளை உட்கொள்ளும் குழந்தைகள் எப்படி வீட்டு உணவு உண்பர். இயற்கையான உணவுகளை விட, செயற்கை சுவைகளுக்கு குழந்தைகள் அடிமையாகி விடுவார்கள். மேலும், பல பேக்கேஜ்ட் உணவுகளில் உள்ள மறைக்கப்பட்ட சர்க்கரை (hidden sugar) மற்றும் மாற்று கொழுப்பு (trans fat) போன்றவை உடனடி பாதிப்புகளைத் தராமல் இருந்தாலும், விரைவில் பெரிய பிரச்சினைகளாக மாறும்.
மாற்றத்தை கொண்டு வாருங்கள் மாற்றம் வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். குழந்தைகள் சாப்பிடும் உணவு ஆரோக்கியமாகவும், அதே சமயம் சுவையாகவும் இருக்க வேண்டும். பழங்கள், நட்ஸ்கள், வீட்டில் தயாரித்த சுண்டல், இட்லி, தோசை ரோல், காய்கறி உப்புமா , பேரீச்சம்பழம், சாலட், போன்றவை சிறந்த மாற்று. இவை சத்தானவையாக மட்டுமல்லாமல், குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் உதவுகின்றன. பொதுவாக அதிக பிஸ்கட் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஈஸ்ட் காரணமாக செரிமான பிரச்சனை தொடங்கி இரைப்பைக் கோளாறுகள் வரை உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. எனவே முதலில் பிஸ்கட்டுகளை தவிருங்கள். அதிகம் பிஸ்கட் சாப்பிடும் குழந்தைகளின் உதடுகள் கறுப்பாக மாறுவதை நீங்கள் நாளடைவில் காணலாம். இது இரைப்பைப் பிரச்னையால் உண்டாகும் அறிகுறி. குழந்தையின் உடலில் ஏற்படும் மாற்றங்களை தினமும் கவனியுங்கள். அவர்களின் சுவையை மாற்றுவதும் அவசியம்.
குழந்தையின் சுவையை மாற்றுவது எப்படி?
ஒரே நாளில் இதை நிறுத்த முடியாது. ஆனால் மெதுவாக மாற்றலாம்.சாக்லேட்டுக்கு பதில் பழம், சிப்ஸ்க்கு பதில் வறுத்த கடலை, ஜூஸ் பாக்ஸ்க்கு பதில் வீட்டிலேயே செய்த பழச்சாறு இப்படி மாற்றங்களை கொண்டு வந்தால், குழந்தைகளின் சுவை உணர்வு இயற்கையாக மாறும். குழந்தைகளை சமையலில் கலந்து கொள்ளச் செய்வது நல்ல வழி. அவர்கள் தயாரித்த உணவை அவர்கள் சாப்பிடும் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் தன் நண்பர்களிடமும்
பெருமையாக இதை தான் சமைத்தது என சொல்லி சாப்பிடும் பொழுது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஓரிரு நாட்கள் ஆரோக்கியமான உணவை வேண்டாம் எனக் கொண்டு வருவார்கள். ஆனால் உடன் இருக்கும் நண்பர்கள் சாப்பிடும் பொழுது இவர்களால் சும்மா இருக்க முடியாது என்பதால் கொண்டு செல்லும் பதார்த்தங்களை நிச்சயம் சாப்பிட துவங்குவார்கள்.
எவை எல்லாம் ஸ்நாக்ஸ் பாக்ஸில் இருக்கக் கூடாது?
“டெய்லி டோஸ் விஷம்” (Daily Dose Poison) என செல்லமாக குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸை அழைக்கிறார்கள் உலக ஊட்டச்சத்து ஆர்வலர்கள். இப்படிப்பட்ட ஸ்நாக்ஸ் பாக்ஸ்களை கொடுப்பதற்கு பதில் கொடுக்காமலேயே பழங்கால முறைப்படி அவர்களுக்கு வெறும் மதிய உணவு மட்டுமே கொடுக்கலாம் என்கிறார்கள். ஸ்நாக்ஸ் பாக்ஸில் “எதை வைக்கலாம்?” என்பதற்கும் மேலாக “எதை வைக்கக்கூடாது?” என்பதைக் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
சாக்லேட், கேண்டி, கிரீம் பிஸ்கட், பாக்கெட் ஜூஸ் போன்றவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை. ஆனால் இவை “empty calories” மட்டும் கொடுப்பவை. இப்படியான கலோரிகள் விரைவில் ஒபிசிட்டியை கொண்டு வரும். அதிக சர்க்கரை உடல் எடையை அதிகரிக்கச் செய்யும், பல் சேதத்தையும் ஏற்படுத்தும்.
மேலும், சர்க்கரை அதிகமாக எடுத்துக்கொண்டால் குழந்தைகளின் கவனம் மற்றும் சக்தி கூட பாதிக்கப்படும்.
சிப்ஸ், பக்கோடா, மிக்சர் போன்ற எண்ணெயில் வறுத்த ஸ்நாக்ஸ் அதிக உப்பு மற்றும் மாற்றுக் கொழுப்பு கொண்டவை. இவை உடல் எடையை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை பாதிக்கவும் காரணமாகின்றன.
அதோடு, தினசரி இதை சாப்பிடும் பழக்கம் வந்துவிட்டால், குழந்தைகள் இயற்கை உணவுகளை விரும்பாமல் போகும்.
உடனடி நூடுல்ஸ், பாக்கெட் நக்கட்ஸ், செயற்கை சாஸ்கள், இவை அனைத்தும் பதப்படுத்தப்பட்டு பல நாட்கள் செயற்கை நிறம் மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு அவை கெடாதபடி பாதுகாக்கப்படும்.
இவை விரைவில் குழந்தைகளின் மெட்டபாலிசத்தை பாதிக்கக்கூடும். மேலும், சில பாக்கெட் உணவுகளில் இருக்கும் செயற்கை ரசாயனங்கள், குளிர்பானங்கள், சோடா, இவை சர்க்கரை மட்டுமல்ல, சில நேரங்களில் காஃபேன் கூட கொண்டிருக்கும்.இவை குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். பேக்கரி ஐட்டங்களிலும் நிறைய ஈஸ்ட், நிறமிகள், பேக்கிங் சோடா போன்றவை கலக்கப்பட்டிருக்கும். இவை மலச்சிக்கல், செரிமான பிரச்னைகள், இரைப்பைக் கோளாறுகள் போன்றவற்றை உருவாக்கும்.
எவை எல்லாம் குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் இருக்கலாம்?
உணவு அட்டவணைப் படி, மத்திம காலை உணவு (Mid Morning food) என காலை 10.30 மணி முதல், 11.30 மணி வேளையை அழைப்போம். பொதுவாகவே படிப்பு மற்றும் வேலை இரண்டிலும் 9:00 மணி முதல் 10 மணிக்குள் வேலையை துவங்கும் மனிதர்களுக்கு பத்தரை மணி முதல் 11.30 மணிக்குள் தேநீர் இடைவேளை அல்லது ஒரு ஸ்நாக்ஸ் இடைவேளை 10 நிமிடங்கள் கொடுப்பது உலக வழக்கம். இது அடுத்த மதிய உணவு வரையிலான இரண்டு மணி நேர செயல்பாட்டுக்கு சக்தி கொடுக்கும். பெரியவர்களுக்கு தேநீர், காபி, உடன் சில ஸ்நாக்ஸ் என்பதே தவறுதான் என்றாலும் வேறு வழியில்லை. ஆனால் குழந்தைகளுக்கு ஆப்பிள், வாழை, திராட்சை, பப்பாளி போன்ற பழங்கள் உடனடி சக்தி தரும்.
இவை வைட்டமின், நீர்ச்சத்து நிறைந்தவை. குழந்தைகள் சுலபமாக சாப்பிடும் வகையில் துண்டுகளாக வெட்டி வைக்கலாம். பழச்சாறுகளாகவும் செய்து கொடுக்கலாம்.
பாதாம், முந்திரி, திராட்சை உலர் பழங்கள், வறுத்த கடலை போன்றவை நல்ல புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்பு தரும். இவற்றை சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து லேசாக வெண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து கூட அவர்களுக்கு வைத்து அனுப்பலாம். இவை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் உதவும். மேலும் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை சேர்த்து வறுத்து அரைத்து புரோட்டின் உருண்டைகளாகவும் செய்து கொடுக்கலாம். இவை வாரத்திற்கு ஒருமுறை 10 உருண்டைகள் வீதம் செய்து வைத்தால் கூட ஐந்து நாட்களுக்கு தினம் இரண்டு என கொடுக்கலாம்.
காய்கறி இட்லி, தோசை ரோல், சப்பாத்தி ரோல், காய்கறி உப்புமா போன்றவை சிறந்த தேர்வுகள்.
இவை வீட்டிலேயே தயாரிப்பதால் பாதுகாப்பானது, மற்றும் சத்தானது.
சுண்டல், நிலக்கடலை உருண்டை, கேழ்வரகு லட்டு, கடலை மிட்டாய், போன்ற பாரம்பரிய உணவுகள் மிகச் சத்தானவை.
நாம் சிறு குழந்தைகளாக இருந்த பொழுது இந்த ஸ்நாக்ஸ் பாக்ஸ் என்கிற பழக்கமே கிடையாது. அதனால் வீட்டில் கொடுத்த மதிய உணவை வேறு வழியே இல்லாமல் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். அதனால்தான் நாம் இப்போது வரை பெரிய அளவிலான ஆரோக்கியப் பிரச்னைகளை சந்திப்பதில்லை. ஆனால் இப்போது குழந்தைகள் சாப்பிடும் ஸ்நாக்ஸ் பாக்ஸ் ஆரோக்கியத்திற்கு சவால் வைத்து வருகின்றன. கடந்த 20 வருடங்களாகவே குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், இதய நோய், சருமப் பிரச்னைகள் என அதிகம் காண முடிகிறது. இதற்குக் காரணம் இந்த டெய்லி டோஸ் விஷங்கள் தான். பள்ளிகளும் தங்களின் குழந்தைகள் ஸ்நாக்ஸ் பாக்ஸில் என்ன கொண்டு வருகிறார்கள், எதை சாப்பிடுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கல்வியில் சிறந்த மாணவர்களை உருவாக்குவது மட்டும் ஒரு பள்ளியின் கடமை அல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதும் கூட பள்ளிக்கூடங்களில் கடமைதான்.
- ஷாலினி நியூட்டன்


