Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குழந்தை இல்லாத பிரச்னையில் விபரீதம்; கணவரை குத்திக்கொன்று குடலை உருவிய ‘மந்திரவாதி’ மனைவி

குருக்ஷேத்ரா: அரியானாவில் கணவனின் வயிற்றை அறுத்து உள்ளுறுப்புகளை பையில் அடைக்க முயன்ற கொடூர மனைவியை போலீசார் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விமலா தேவி ஆகியோர் அரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பெஹோவா சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ராஜேஷ் குடிநீர் விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், இந்த தம்பதிக்கு பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாததால் அவர்களுக்குள் அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் விமலா தேவி மாந்திரீகம் மற்றும் பேயோட்டும் சடங்குகளில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் இருந்து கூச்சல் சத்தம் கேட்டதை தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் ரிங்கு என்பவர் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் கொடூர காயங்களுடன் சரிந்து கிடந்ததும், அவரது வயிற்றிலிருந்து வெளியே வந்த குடலை விமலா தேவி ஒரு பையில் திணித்துக் கொண்டிருந்ததையும் கண்டு அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உரிமையாளரை பார்த்ததும் பதற்றமடைந்த விமலா தேவி மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவ இடத்திலிருந்து 3 கத்திகளை கைப்பற்றிய போலீசார், ராஜேஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவரது வயிறு 35 சென்டிமீட்டர் அளவிற்கு அறுக்கப்பட்டதும், கல்லீரலின் ஒரு பகுதி மற்றும் வலது சிறுநீரகம் மாயமாகி உள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘தம்பதிக்கு இடையே நடந்த மோதல்கள் மற்றும் மாந்திரீக பின்னணி குறித்து தடயவியல் ஆதாரங்களுடன் விசாரணை நடைபெற்று வருகிறது; மருத்துவமனையில் உள்ள பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற பிறகே கொலைக்கான உண்மை காரணம் தெரியவரும்’ என்று தெரிவித்தனர்.