இன்று முதல் 29ம் தேதி வரை குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு வாரம்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
சென்னை: குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் விழிப்புணர்வு வாரம் இன்று (நவ 25ம் தேதி) முதல் 29ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் விழிப்புணர்வு வாரம் நவம்பர் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை கொண்டாட வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பள்ளி அளவிலான இடைப் பருவத் தேர்வுகள் காரணமாக இந்த விழிப்புணர்வு வாரத்தை நவம்பர் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை கொண்டாட அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழிப்புணர்வு வாரத்தில், பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது ஏதேனும் ஒரு குழு பொறுப்பு ஆசிரியர் ‘மாணவர் மனசு’ திட்டம் சார்ந்து காலை இறை வணக்க கூட்டத்தில் உரையாற்ற வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு பள்ளி அளவிலான குழுவில் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் 2 பேர், பள்ளி மேலாண்மைக் குழு பிரதிநிதி 1, ஆசிரியரல்லா பணியாளர் 1, வெளிநபர் 1 ஆகியோர் இடம் பெற்றுள்ளதால், இந்த குழு கூட்டத்தை விழிப்புணர்வு வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் பெற்றோர்கள் வசதிக்கு ஏற்ப நடத்தி, அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர் மனசு பெட்டியில் பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களுடன் விவாதிக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் இடையே குழந்தைகள் உதவி மையம் எண் 1098 மற்றும் 14417 ஆகிய எண்கள் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இணைய தள பாதுகாப்பு, மாணவர்கள் இணைய தளத்தில் உள்ள தகவல்களை பாதுகாப்பாக எவ்வாறு கையாள்வது மற்றும் இணையதள பாலியல் வன்முறைகளை தவிர்ப்பது எப்படி என்றும், மகிழ் முற்றம் செயல்பாடாக குழு வாரியாக விவாதம் நடத்தி, வகுப்பறையில் காட்சிப்படுத்த வேண்டும். இதற்கான சுவரொட்டிகள் மாணவர்கள் அறியும் வகையில் வகுப்பறைகளில் இடம்பெறச் செய்ய வேண்டும். பள்ளிகளின் தகவல் பலகையிலும், வகுப்பறைகளிலும் பள்ளிக்கல்வித்துறையின் மாணவர் உதவி எண், குழந்தைகளுக்கான அவசர உதவி எண்ணை குறிக்கவும் தலைமையாசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
