Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

27 வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினேன்: நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை சபலென்கா பேட்டி

லண்டன்: மகளிர் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் கடந்த ஒரு ஆண்டாக முதலிடத்தில் இருப்பவர் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அரினா சபலென்கா. 27 வயதான இவர் நடப்பு ஆண்டில் 4 பட்டங்களை வென்றார். கடந்த செப்டம்பரில் யுஎஸ் ஓபனில் தனது 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். பிரெஞ்ச், ஆஸ்திரேலியா ஓபன் மற்றும் கடந்த வாரம் டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரில் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார். இந்நிலையில் அவர் தனது திருமணம், மற்றும் குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்த வருங்கால திட்டம் பற்றி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டென்னிசில் தனது முழு திறனையும் அடைய விரும்புவதால் தனது திருமணம், குடும்ப வாழ்க்கையை தள்ளி போட்டுள்ளேன். அடுத்த 5 ஆண்டில் குழந்தை பெற்றுக்கொள்ளவும், அதன்பின்னர் மீண்டும் டென்னிசில் களம் இறங்கவும் திட்டமிட்டுள்ளேன். தனக்கு 18 வயதாக இருந்தபோது, ​​25 வயதிற்குள் நான் விரும்பிய அனைத்தையும் வெல்வேன் என்று நினைத்தேன். 25 வயதில், நான் குழந்தை பெற்று பின்னர், திரும்பி வந்து தொடர்ந்து வெற்றி பெற நினைத்தேன். 25 வயதை எட்டியபோது, தொடர்ந்து வெற்றி பெற்றதால் 27 அல்லது 28 வயசுல குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என தள்ளிப்போட்டேன். இப்போ எனக்கு 27 வயசு ஆகுது. இப்போதும் அதனை தள்ளிப்போட யோசிக்கிறேன்.

இப்போதைக்கு, டென்னிசில் முழுத் திறனையும் அடைய விரும்புகிறேன். அதில் நான் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அடுத்த 5 ஆண்டில் குடும்ப வாழ்க்கை தொடங்குவேன். நான் குழந்தைகளை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இப்போது என் தொழில் வாழ்க்கைதான் முன்னுரிமை. இவ்வாறு அவர் கூறினார்.சபலென்கா, 2024ம் ஆண்டு முதல் பிரேசில் தொழிலதிபர் ஜார்ஜியோஸ் ஃபிராங்குலிஸுடன் காதல் உறவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கடற்கரையில் ஜாலியாக இருக்கும் படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சபலென்கா, ``நிதானமாக இருக்க வேண்டிய நேரம் இது’’ என பதிவிட்டுள்ளார்.