Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைக்கு பீஸ் யார் கட்டுவா? மண்ணையா சாப்பிடுவேன்? எங்கிருந்து சட்டை போடுவேன்? நான் ரியல் எஸ்டேட் செய்வதில் என்ன தவறு; இன்னும் நிறைய தொழில் பண்ணுவேன்: அண்ணாமலை ஒப்புதல் பேட்டி

கோவை: ‘ரியல் எஸ்டேட் செய்வது என்ன தவறு? இன்னும் நிறைய தொழில் பண்ணுவேன்’ என்று அண்ணாமலை தெரிவி்த்துள்ளார். கோவையில் பாஜ விவசாய அணி பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. இதில், அணியின் மாநில தலைவர் ஜி.கே.நாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களை சந்தித்தார். அப்போது, நிருபர்கள், சமூக வலைதளத்தில் கர்நாடக மாநிலத்தில் நீங்கள் ரியல் எஸ்டேட் செய்வதாக தகவல்கள் வருகிறது என கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை கூறியதாவது:

என்ன தவறு இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். நான் மண்ணை சாப்பிட முடியுமா?. நான் தொழில் செய்கிறேன். யாரையும் அடித்து பிடுங்கவில்லை. என்னுடைய தொழில், என்னுடைய விவசாயம், என்னுடைய அரசியலை நான் செய்கிறேன். இதில் எதை நீங்க தவறாக பார்க்கிறீங்க. நான் எங்கிருந்து சாப்பிடுவேன். என் குழந்தைகளுக்கு எப்படி பீஸ் கட்டுவேன். எதை செய்தாலும் நியாயமான முறையில் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். என்னை எந்த தொழிலும் செய்ய வேண்டாம் என கையை கட்டிப்போட்டு உட்கார வைத்தால், நான் எங்கிருந்து சாப்பிடுவேன்.

எங்கிருந்து சட்டை போடுவேன். எப்படி அரசியல் செய்வேன். என் காருக்கு எப்படி டீசல் போடுவேன். நான் செய்யும் தொழிலில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். எந்த தொழிலை ஆரம்பிக்கவும் எனக்கு உரிமை இருக்கிறது. இப்போது நான் கட்சியில் மாநில தலைவராக இல்லை. இதனால், எனக்கு இப்போது ஓடுவதற்கும், மூச்சு விடவும், எனது வேலையை செய்யவும், பொருள் ஈட்டவும், விவசாயம் செய்யவும் நேரம் இருக்கிறது. எனது மனைவி வேலைக்கு செல்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது. அவர் வாழ்க்கையை அவர் வாழ்கிறார்.

நான் டீசல் போட்டு இங்கு வர ரூ.3 ஆயிரம் செலவானது. கோவா எஸ்.ஐ.ஆர் பணிக்கு நான் தான் பொறுப்பு. அங்கு செல்ல விமான டிக்கெட் என் பணம் தான். இதற்கு நான் வெளியில் சென்று பிச்சை எடுக்க முடியுமா?. கட்சி பணிகளுக்கு சொந்த காசில் தான் செலவு செய்கிறேன். கட்சியில் இருந்து பணம் வாங்குவது இல்லை. ஒரு நாளைக்கு ஆயிரக் கணக்கில் பணம் செலவாகிறது. இன்னும் பல தொழில்கள் ஆரம்பிக்க உள்ளேன். நீங்களும் செய்யுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* எஸ்ஐஆர் படிவத்தில் நிறைய குழப்பம்

எஸ்ஐஆர் படிவம் குறித்த கேள்விக்கு, ‘எஸ்ஐஆர் படிவத்தில் நிறைய சந்தேகம் இருக்கின்றது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் குளறுபாடிகள் இருப்பது உண்மைதான். இதை தேர்தல் அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். ஆனாலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். நிறைய குளறுபடிகள் இருக்கின்றது என்பது உண்மைதான். நீங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் பிஎல்ஓ-க்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்று அண்ணாமலை தெரிவித்தார்.

* விளையாட்டில் சிறந்த மாநிலம் தமிழகம்

அண்ணாமலை கூறுகையில், ‘தமிழகம் விளையாட்டை பொறுத்தவரை எப்பொழுதும் சிறந்த மாநிலம். அரசியலுக்கு வந்த பின்பு என்னுடைய பிட்னஸ் போய்விட்டது. அதை சரி செய்து கொண்டு இருக்கிறேன்’ என்றார்.

* ஆட்டு குட்டிகளை விற்று பங்கு சந்தையில் முதலீடு

என் செலவுகளை நண்பர்கள் தான் பார்த்து கொண்டார்கள் என தெரிவித்த உங்களுக்கு முதலீடு செய்ய எப்படி பணம் வந்தது என நிருபர்கள் கேட்டதற்கு, ‘5 லட்ச ரூபாய் பங்கு தொகையாக தொழிலில் போட கூட முடியாத அளவிற்கா இருக்கின்றேன். நிறுவனங்களில் பங்கு தொகை இரண்டு லட்சம் வரை முதலீடு செய்து இருக்கின்றேன். ஆன்லைனில் கம்பெனிகளில் எவ்வளவு பங்கு முதலீடு என்பதை பாருங்கள், அந்த அளவிற்கு கூட தகுதி இல்லாமல் நான் இருக்கிறேனா?.

10 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி கையிருப்பில் பணம் வைத்திருக்கிறேன். எனது அப்பா, அம்மா விவசாயத்தில் இருக்கின்றனர். இப்போதும் ஆட்டுக்குட்டி விற்பனை செய்கின்றோம். என்னால் இரண்டு லட்ச ரூபாய் முதலீடு செய்ய முடியாதா? ரோட்டில் இருந்து நான் பிச்சையா எடுத்து கொண்டு இருக்கிறேன்’ என்று அண்ணாமலை தெரிவித்தார்.

* கூட்டணி பற்றி பேச எனக்கு அதிகாரமில்லை

அண்ணாமலை கூறுகையில், ‘தேர்தல் இன்னும் சூடு பிடிக்கவில்லை. நவம்பர், டிசம்பர் நேரத்தில் அனைத்தும் சரியான கோணத்தில் விழும், கூட்டணி இறுதியாகும். அரசியல் ஆட்டத்தை பொறுத்த வரை இறுதியில் யார் ஜெயிக்கின்றார்கள் என்பது தான் முக்கியம். இறுதிப்போட்டிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தயாராகிக் கொண்டு இருப்பதாக பார்க்கின்றேன். டிசம்பர் வரை காத்திருப்போம். நான் கட்சி தலைவர் இல்லை. கூட்டணி பொறுப்பாளர் இல்லை.

இதனால், நான் கூட்டணியை பற்றி பேசுவது சரியாக இருக்காது’ என்றார். அதிமுக, தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு, ‘நான் அதிமுக கட்சியை சேர்ந்தவன் இல்லை என்பதால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது’ என்றார். ஆதவ் அர்ஜூனா குறித்து சார்லஸ் மார்ட்டின் கூறிய புகார் குறித்து கேட்ட கேள்விக்கு, ‘லாட்டரி மார்ட்டின் குடும்ப விவகாரத்திற்குள் செல்ல விரும்ப வில்லை’ என்று அண்ணாமலை தெரிவித்தார்.

* தமிழகம் பொருளாதாரத்தில் முன்னேறி இருப்பதால் தீவிரவாதிகளால் ஆபத்து

‘தமிழகத்தை பொறுத்தவரை காவல்துறை டீம் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் சேலம், கோவையில் ஐஎஸ்ஐஎஸ் விஷமிகள் உள்ளே வருகின்றனர். எனவே, தமிழக முதல்வர் இதற்கு தனி கவனம் செலுத்தி சிறப்பான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். முதல்வர் நேரடியாக கண்காணிக்க வேண்டும். மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு ஆபத்து அதிகம்.

நாம் மற்ற மாநிலங்களை விட பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளோம். சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகள் பொருளாதாரத்தில் முன்னேறி இருப்பதால் தீவரவாதிகளுக்கு முக்கிய இலக்காக உள்ளது. நாம் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இதில், அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். அதிகாரிகள் மிகவும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்’ என்று அண்ணாமலை தெரிவித்தார்.