Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

குழந்தையை நரபலி கொடுத்து சடலம் ஏரியில் புதைப்பா?: செய்யாறு அருகே பரபரப்பு

செய்யாறு: ெசய்யாறு அருகே குழந்தையை நரபலி கொடுத்து சடலத்தை ஏரியில் புதைத்தாக தகவல் பரவியது. இதனால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வன்னியந்தாங்கல் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இங்கு நேற்று மாலை சுமார் 4 மணியளவில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு நபர் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தாராம். பின்னர் தான் கொண்டு வந்திருந்த மண் வெட்டி மூலம் பள்ளம் தோண்டி எதையோ புதைத்துள்ளார்.

இதனை தூரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த வாலிபர் பார்த்துள்ளார். சந்தேகம் அடைந்த வாலிபர், அங்கு சென்று அந்த நபரிடம், ‘இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய், என்ன புதைத்தாய்’ என கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து பைக்கில் சென்றுவிட்டாராம். இதனால் சந்தேகமடைந்த வாலிபர் கிராம மக்களிடம் தெரிவித்தார். அப்போது கிராம மக்களிடையே, குழந்தையை கொலை செய்தோ அல்லது நரபலி கொடுத்தோ இங்கு உடலை புதைத்திருக்கலாம் என தகவல் பரவியது. இது காட்டுத்தீ போல் கிராமம் முழுவதும் பரவியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், கிராம மக்களின் உதவியுடன் அந்த மர்ம நபர் சடலம் புதைத்ததாக கூறப்பட்ட இடத்தை தோண்டினர். அதில் ஒரு மூட்டை இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது நாயின் சடலம் இருப்பது தெரிய வந்தது. வளர்ப்பு நாய் இறந்ததால், அதன் உரிமையாளர் இங்கு கொண்டு வந்து புதைத்துவிட்டு சென்றது தெரிய வந்தது.

இதை பார்த்த பின்னர்தான் கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.