Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னைக்கு நாளை வருகை; தமிழக முதல்வரை ராகுல் சந்தித்து பேச வாய்ப்பு இல்லை: மாணிக்கம் தாகூர் சூசக தகவல்

மீனம்பாக்கம்: புதுடெல்லியில் இருந்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னை விமானநிலையத்தில் நேற்றிரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மாமல்லபுரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்று வரும் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் பயிற்சி முகாம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக, நாளை (ஆகஸ்ட் 1ம் தேதி) டெல்லியிலிருந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சென்னைக்கு வருகிறார். அவரது முழு பயண விவரங்கள் இன்று (வெள்ளி) அறிவிக்கப்படும். இது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி.

மேகதாது அணை பிரச்னையில் பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் மற்றும் தமிழக முதல்வர் ஆகிய 3 பேர்தான் முக்கியமானவர்கள். இப்பிரச்னையில் அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் முக்கியமில்லை. மேகதாது அணை பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடியிடம் பாமக தலைவர் ஏன் நேரடியாக பேசத் தயங்குகிறார். இங்கு வீரமாக பேசும் அவர், நாடாளுமன்றத்தில் இதுபற்றி பேச ஏன் தயங்குகிறார்? அங்கு ராகுல்காந்தி எதிர்க்கட்சித் தலைவர்தான். அவர் பிரதமராகிவிட்டால், இப்பிரச்னை குறித்து நாங்கள் அவரிடம் தைரியமாக பேசுவோம். தமிழ்நாட்டுக்கு பாமக தலைவர் மட்டும் நல்லது செய்வது போலவும், மற்றவர்கள் எதிர்ப்பாக இருப்பது போலவும் பேசுகிறார். தமிழகத்தின் உரிமையை முதல்வர் உள்பட அனைவரும் விட்டுக் கொடுப்பது போல் பேசுவது சரியான செயல் அல்ல. இதுதொடர்பாக அனைவரின் மீதும் பாமக தலைவர் பழிபோடுவதை நிறுத்த வேண்டும்.

சென்னையில் என்டிஏ கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவேன் என்று பாமக தலைவர் பேசினால் மட்டும் போதாது. இதேபோல் அவர் டெல்லிக்கு சென்று, பிரதமர் மோடியிடம் மேகதாது அணை கட்டுவதற்கு நீங்கள் ஆதரவு அளித்தால், உங்கள் கூட்டணியிலிருந்து பாமக வெளியேறிவிடும் என்று தைரியமாக கூறட்டும். இதேபோல் பாமக தலைவர் தொடர்ந்து ராகுல்காந்தியை வம்புக்கு இழுத்து பேசிக்கொண்டிருந்தால், அவருக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். இதன்மூலம் அவர் பற்றிய பல்வேறு உண்மைகளை வெளியிடுவோம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.