Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முதல்வர் பிரேன்சிங் ராஜினாமாவை தொடர்ந்து மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை தடுக்க புதிய யுக்தி; பா.ஜ எம்எல்ஏக்களே போர்க்கொடி தூக்கியதால் நடவடிக்கை

இம்பால்: மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங் ராஜினாமா செய்த பிறகு புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியாததால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் 2023 மே 3ம் தேதி தொடங்கிய இனக்கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த கலவரத்தில் 250 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். இந்த நிலையில் மணிப்பூர் சட்டப்பேரவையின் கடைசிக்கூட்டத்தொடர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி முடிவடைந்தது. இதனை தொடர்ந்து கடந்த 10ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட இருந்தது. மணிப்பூர் அரசுக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட பா.ஜ எம்எல்ஏக்கள் அதிருப்தியாக இருந்தனர்.

இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களால் சமர்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட இருந்தது.இந்த சூழலில் டெல்லி மேலிடத்தால் அழைக்கப்பட்ட மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங், அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அதன்பிறகு மணிப்பூர் வந்த அவர் கடந்த 9ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் ராஜினாமா செய்து 5 நாட்கள் ஆன நிலையிலும் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பாஜ முடிவு செய்யவில்லை. இதுதொடர்பாக மணிப்பூர் மாநில பா.ஜ மேலிட பொறுப்பாளர் சம்பித் பத்ரா கடந்த ஒரு வாரமாக அங்கு இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், பா.ஜ எம்எல்ஏக்கள் இடையே ஆலோசனை நடத்தி வந்தார். மேலும் கவர்னர் அஜய்குமார் பல்லாவிடமும் தொடர்ந்து 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார். 6 மாதத்திற்குள் சட்டப்பேரவை கூட வேண்டும்.

ஆனால் சட்டப்பேரவை கூட்டப்படாதது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘அரசியலமைப்பு 174வது பிரிவின்படி இரண்டு சட்டமன்ற கூட்டத்தொடர்களுக்கு இடையே ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது. ஆனால் இப்போது 6 மாதங்கள் கடந்து விட்டதால் அரசியலமைப்பின் 174வது பிரிவு மீறப்பட்டுள்ளது. இது வேண்டுமென்றே அரசியலமைப்பை அவமதிக்கும் நடவடிக்கை”என்று குற்றஞ்சாட்டினார். இந்தநிலையில் திடீரென நேற்று இரவு மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வெளியிட்ட அறிக்கையில்,’ மணிப்பூர் ஆளுநரிடம் இருந்து அறிக்கையைப் பெற்ற பிறகு, பிற தகவல்களைப் பரிசீலித்த பிறகு, இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படி அந்த மாநில அரசை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மணிப்பூர் பா.ஜ பொறுப்பாளர் சம்பித் பத்ராவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

* மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் துப்பாக்கிச்சூடு:3 வீரர்கள் பலி

மணிப்பூர் கலவரத்தை தடுக்க அங்கு சிஆர்பிஎப் படை தங்க வைக்கப்பட்டுள்ளது. இம்பால் மேற்கு மாவட்டம் லாம்பெல் பகுதியில் உள்ள முகாமில் நேற்று இரவு 8.20 மணிக்கு ஹவில்தார் சஞ்சய்குமார் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ஒரு எஸ்ஐ, ஒரு வீரர் பலியானார்கள். 8 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அதை தொடர்ந்து சஞ்சய்குமார் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* நாடு முழுவதும் இதுவரை 134 முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

* அதிகபட்சமாக உபி, மணிப்பூர் மாநிலங்கள் கலைக்கப்பட்டுள்ளன.

* ஜம்மு காஷ்மீரில் சாதனை அளவாக 12 ஆண்டுகள் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்துள்ளது.