Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி பட்டியலின பழங்குடியின மாணவர்களின் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறார்: அமைச்சர் பேச்சு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் மா.மதிவேந்தன் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரையில் கல்வியை தன் கண்களாக பாவித்து, அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த கண்களுக்கு கூடுதலாக கண்ணாடி போடும் விதமாக, பட்டியலின பழங்குடியின மாணாக்கரின் கல்விக்கு கூடுதல் முக்கியத்தும் அளித்து பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர் நலன் கருதி கடந்த நான்காண்டுகளில் ரூபாய் 525 கோடி மதிப்பீட்டில், 10,040 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், 74 புதிய விடுதிகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, 19 புதிய விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ரூ.77 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில், 93 சமுதாயக்கூடங்கள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு, அதில் 35 சமுதாயக்கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கிட்டத்தட்ட 6,502 நபர்களுக்கு தீருதவி தொகை, கருணைத் தொகை மற்றும் ஓய்வூதியத்திற்காக ரூபாய் 71 கோடியே 45 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவிற்கென மாநில அளவில் காவல் துறைத் தலைவர், திராவிட மாடல் ஆட்சியில் இது ஒரு புதிய முயற்சியாக, கூடுதல் காவல் துறைத் தலைவர் மற்றும் மாவட்ட அளவில் 38 காவல் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளடக்கிய தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

இந்த நான்கு ஆண்டுகளில் முதல்வர் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி, அடித்தட்டு மக்கள், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பாட்டாளி மக்கள், தொழில் முனைவோர்கள் என அனைத்து மக்களுக்குமான பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலேயே, வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்றி உள்ளார். இத்தகைய சிறப்புமிக்க நிர்வாகத் திறனின்கீழ், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த மானியமானது, இறுதி மானியம் அல்ல, இனியும் தொடரக்கூடிய திராவிடமாடல் ஆட்சியின் உறுதி மானியம். இவ்வாறு அவர் பேசினார்.