சென்னை: தமிழ் வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக முதலமைச்சர் கணினி தமிழ் விருது 2013 முதல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது விருது பெறுபவருக்கு விருது தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. 2025ம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு தனியார் மற்றும் நிறுவனத்திடம் இருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருட்கள் / செயலிகள் வரவேற்கப்படுகின்றன.
விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருட்கள் போட்டிக்குரிய ஆண்டிற்கு முந்தைய மூன்றாண்டுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சி துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாக 31.12.2025ம் நாளுக்குள் உரிய ஆவணங்களோடு அனுப்ப வேண்டும்.
