Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த மினி பஸ் திட்டத்திற்கு மக்களிடம் மாபெரும் வரவேற்பு: 90 ஆயிரம் கிராமப்புறங்களில் 1 கோடி பேர் பயன்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய மினி பஸ் திட்டம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இது வரை 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் 1 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். கலைஞர், தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் அரசு போக்குவரத்து கழகங்களை உருவாக்கினார். இந்தியாவில் பேருந்து வசதிகளில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு எனும் பெருமை அதன் மூலம் ஏற்பட்டது. பேருந்து வசதிகள் கிடைக்காத குக்கிராம பகுதி மக்களுக்கும் பேருந்து வசதி கிடைக்கத்தக்க வகையில் மினி பஸ் திட்டம் 1997ம் ஆண்டில் கலைஞரால் ஏற்படுத்தப்பட்டது.

மினி பஸ் திட்டம் தொடர்பான தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தொடர்ந்த வழக்கு ஒன்றில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து தொழில் சார்ந்த பல்வேறு தரப்பினர் தெரிவித்த ஆலோசனைகள் அடிப்படையில் புதிய விரிவான மினி பஸ் திட்டம் 2024 குறித்து அறிவிக்கப்பட்டது. தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வெளியிடப்பட்ட அறிக்கையில் மறுபடியும் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி 25 கி.மீ. தூரத்திற்கு மினி பஸ் இயக்கப்படும் என்றும் முக்கிய அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு சென்று பொதுமக்களை இறக்கிவிட ஏதுவாக மேலும் 1 கிலோ மீட்டர் தூரம் வரை மினி பஸ்களை இயக்கிடவும் வழிவகை செய்யப்பட்டது.

இதன்படி, 3,103 வழித்தடங்களில் உள்ள 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயன்பெறத்தக்க வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 16ம் தேதி தஞ்சாவூரில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுவரை, பேருந்துகளை தங்கள் கிராமத்தில் காணாத பொதுமக்கள் கண்டு மகிழ்ந்து பரவசம் அடையும் வகையில் மினி பேருந்துகள் கிராமப்புறங்களில் பயணிக்க தொடங்கிவிட்டன. இந்த மினி பஸ் தங்களுடைய கிராமத்திற்கு வந்ததும் மூதாட்டி ஒருவர் தரையில் விழுந்து தலைவணங்கி வரவேற்றார். வேறு சிலர் பேருந்து வந்த வழித்தடத்தில் கற்பூரம் ஏற்றி மகிழ்ந்து வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

திருத்தணியிலிருந்து தும்பிக்குளத்திற்கு புதிதாக இயக்கப்பட்ட மினி பஸ்ஸில் பயணம் செய்த பெண் கூறுகையில், ‘நான் தும்பிக்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். விவசாய கூலி தொழிலாளியான நான், தினமும் வேலைக்கு செல்லும்போது நடந்தே சென்று அவதிப்பட்டு வந்தேன். தற்போது மினி பஸ் சேவை தொடங்கியிருப்பதால், இதில், பாதுகாப்பாக வேலைக்கு சென்று மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் கிராமத்திற்கு இந்த திட்டத்தை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். மாணவி பவானி கூறுகையில் “திருத்தணியில் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறேன். பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்ல சிரமமாக இருந்தது.

இப்போது மினி பஸ் வருவதால், பள்ளி செல்ல வசதியாக இருக்கிறது’ என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும் கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்திலிருந்து நெல்லிக்குப்பம் வரை செல்லும் மினி பஸ்ஸில் பயணம் செய்த கன்னிவாக்கத்தை சேர்ந்த வரதராஜன் கூறுகையில், ‘எங்கள் ஊருக்கு போக்குவரத்து வசதி கிடையாது. இரு சக்கர வாகனங்களிலோ, ஆட்டோவிலோ அதிக செலவு செய்ய வேண்டியிருந்தது. தற்போது மினி பஸ் வருவதால், சிரமம் மற்றும் செலவினம் குறைந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்’ என்றார். முதல்வர் தொடங்கி வைத்துள்ள இந்த மினி பஸ் திட்டத்தால், ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயணம் செய்துள்ளனர். இத்திட்டம் பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.