Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதலமைச்சரின் குழந்தைகள் நாள் வாழ்த்துச் செய்தியை வாசித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்று (14.11.2025) பள்ளிக் கல்வித் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு விழா மற்றும் குழந்தைகள் நாள் விழாவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்துச் செய்தியை வாசித்தார்.

முதலமைச்சரின் குழந்தைகள் நாள் வாழ்த்துச் செய்தி;

தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கும் குழந்தைகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த குழந்தைகள் நாள் வாழ்த்துகள்!

நூலைப்படி- சங்கத்தமிழ்

நூலைப்படி- முறைப்படி

நூலைப்படி!

காலையிற்படி- கடும்பகல் படி

மாலை, இரவு பொருள்படும் படி

நூலைப்படி!

கற்பவை கற்கும்படி

வள்ளுவர் சொன்னபடி

கற்கத்தான் வேண்டும் அப்படிக்

கல்லாதவர் வாழ்வதெப்படி? நூலைப்படி!

- என்று பாவேந்தர் பாரதிதாசனார் அறிவுறுத்தியபடி, இனிமையான உங்கள் குழந்தைப் பருவத்தை நீங்கள் கல்வியில் செலவிட வேண்டும்! அனைத்துக் குழந்தைகளும் தரமான கல்வி பெற வேண்டும் என்பதுதான் நமது அரசின் எண்ணம்!

எவராலும் அழிக்க முடியாத நிரந்தரச் சொத்து கல்வி மட்டுமே. நமது அய்யன் திருவள்ளுவரும் அழிக்கமுடியாத சிறந்த செல்வம் கல்வி என்கிறார்.

"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு

மாடல்ல மற்ற யவை"

கற்பதில் இருந்து ஒரு குழந்தைகூட விடுபட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள நமது திராவிட மாடல் அரசு, குழந்தைகளுக்காகப் பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திவருகிறது. மிகப்பெரிய சவால்களையும் குழந்தைகள் சந்திக்க ஏதுவாக நமது கல்வியில் பல்வேறு மேம்பாடுகளைச் செய்து வருகிறோம். குறிப்பாக, கல்வியில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. பாடப்பகுதிகள் டிஜிட்டல் பாடங்களாக மாற்றி அளிக்கப்படுகின்றன.

நம் குழந்தைகள் சோர்வடையாமல் ஆரோக்கியத்தோடும் உற்சாகத்தோடும் படிக்க வேண்டுமென்றுதான், காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் ஊட்டச்சத்து உணவை உண்டு, கற்றலில் ஈடுபடுவதைக் கண்டு பூரிப்படைகிறேன்.

பல்வேறு போட்டிகள், விளையாட்டுகள், கொண்டாட்டங்கள், கலைத் திருவிழா, ஆற்றல் மன்றம், தொல்லியல் மன்றம், சுற்றுச்சூழல், வானவில் போன்ற மன்றங்கள், கல்விச் சுற்றுலாக்கள், தேசிய பசுமைப் படை, பாரத சாரண சாரணியர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், தேசிய பசுமைப் படை, நாட்டு நலப்பணித் திட்டம், மகிழ்முற்றம் போன்றவை மூலமாக நீங்கள் பயிலவும் பல்வேறு வாழ்வியல் திறன்களைப் பெறவும் திராவிட மாடல் அரசு எண்ணற்ற வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

நம் குழந்தைகளின் கல்வி எக்காரணம் கொண்டும் தடைபடக் கூடாது என்பதற்காக, அரசு அதிக நிதியினை ஒதுக்கி உட்கட்டமைப்பு வசதிகளைப் படிப்படியாக மேம்படுத்தி வருகிறது. மலைப்பாங்கான பள்ளிகளில் உள்ள குழந்தைகள், பள்ளி செல்வதற்காக வாகன வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி மட்டுமல்ல, உயர்கல்வியும் தடையில்லாமல் கிடைக்க அனைத்து முன்னெடுப்புகளையும் நமது திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது.

அன்புக் குழந்தைகளே, உங்களின் கவனம் முழுவதும் படிப்பது மட்டுமின்றி, உடல், மன நலனைப் பராமரிப்பதிலும் இருக்க வேண்டும். இன்றைய உலகில் வேண்டாத பல்வேறு பழக்கங்களும் உங்களைச் சுற்றிலும் திசைதிருப்பக் காத்துக் கிடக்கின்றன. அதிக நேரத்தை இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் செலவிடுவது உங்களின் பகுத்தறியும் சிந்தனையைச் சிதைத்து, மூளையை மழுங்கடித்து, ஏதொன்றிலும் ஆழங்காற்படாமல் தடுக்கிறது. எனவே, எதையும் அளவோடு, அறிவோடு, முறையாகப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் உடல்நலனை வலுவானதாக்க உடற்கல்வி உதவும். உள்ளரங்க மற்றும் வெளி விளையாட்டுகள் புத்துணர்ச்சியும் உற்சாகமும் தரும்.

ஒரு தாயின் கரிசனத்தோடு தந்தையின் அக்கறையோடு தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை உறுதி செய்வதற்கு நானும் திராவிட மாடல் அரசும் என்றும் துணைநிற்போம்! நாளைய தமிழ்நாடு வலிமையான தமிழ்நாடாகத் திகழ உழைப்போம்!" என முதலமைச்சரின் குழந்தைகள் நாள் வாழ்த்துச் செய்தியை அமைச்சர் அன்பில் மகேஸ் வாசித்தார்.