தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணி பிரம்மாண்ட பேரணி: பாஜக போட்டி பேரணியை நடத்தியதால் பதற்றம்
புதுடெல்லி: தேர்தல் ஆணையத்திற்கு எதிராக இந்தியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணியை முன்னிட்டு டெல்லி எல்லைகளில் எல்லைப்பாதுகாப்பு படை குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஜக தரப்பில் போட்டி பேரணி நடந்ததால் தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆர்) மிகப்பெரிய அளவிலான சதி மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையாக குற்றம்சாட்டி வந்தன. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தேர்தல் பணிகளில் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவர் பதவி விலக வலியுறுத்தி, நேற்று டெல்லியில் நடந்த மாதிரி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆறு குற்றச்சாட்டுகளுடன் தீர்மானம் கொண்டு வந்தார். அதில் சுமார் 13.2 கோடி வாக்காளர்களின் பெயர்கள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் பிற இரு கமிஷனர்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இந்த பின்னணியில், ஜனநாயகத்தை காப்போம் என்ற முழக்கத்துடன் டெல்லியை நோக்கி படையெடுக்கும் மாபெரும் பேரணிக்கு இன்று எதிர்க்கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்தன.
இந்த போராட்டத்தை முன்னிட்டு டெல்லி-குருகிராம் எல்லையில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகன தணிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. தலைநகரின் கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் தொடங்கும் இந்தியா கூட்டணியின் பேரணி மின்டோ ரோடு வழியாக ராம்லீலா மைதானத்தை நோக்கி அணிவகுத்து செல்கிறது. இந்திய மாணவர் சங்கமும் தனியாக பேரணியாக வந்து இதில் இணைந்தது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அதிகாலை 5.30 மணி முதலே தொண்டர்கள் தலைநகரில் குவியத் தொடங்கினர்.
கன்னாட் பிளேஸ்-மின்டோ ரோடு சந்திப்பில் இருந்து நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த 1.5 கிலோமீட்டர் தூர பேரணி, முக்கிய பிரமுகர்களின் எழுச்சி முழக்கங்களுடன் ராம்லீலா மைதானத்தை நோக்கி சென்றடைந்தது. இந்த பிரம்மாண்ட கூட்டத்தை முன்னிட்டு தலைநகர் முழுவதும் 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சுமார் 10,000 போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாலை 5 மணிக்குள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும், மைதானத்தில் இரவு தங்க அனுமதி கிடையாது என்றும் போலீசார் கடுமையான நிபந்தனைகளை விதித்தனர். ஐ.டி.ஓ, ராஜ்காட், டெல்லி கேட் உள்ளிட்ட முக்கிய சந்திaப்புகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
மைதானத்தில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் மட்டுமே கூட முடியும் என போலீசார் கணித்துள்ள நிலையில், சுமார் 10 லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெபி மாதர் பேசுகையில், ‘இந்திய ஜனநாயகத்தின் வீரர்களும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பவர்களும் ராம்லீலா மைதானத்திற்கு அணிவகுத்து செல்கின்றனர். இந்த அநீதிக்கு எதிராக நாங்கள் அமைதியாக முடங்கி கிடக்க முடியாது. தலைமை தேர்தல் கமிஷனர் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று தெரிவித்தார். ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும் நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே மம்தா பானர்ஜியை சந்தித்த போதிலும், தங்கள் அமைப்பு தனித்துவத்துடன் செயல்படும் என்பதால் பேரணியில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியின் பேரணிக்கு பதிலடியாக 1984ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி நடந்த சீக்கியர் படுகொலை நினைவு நாளை கையில் எடுத்து, மேற்கு டெல்லியில் பாஜக தனியாக பேரணியை நடத்தியது. ஹரி நகரில் இருந்து தொடங்கிய இந்த பேரணியில் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ெடல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் திரளாக பங்கேற்றனர். இதற்கிடையே, தீபாவளி பண்டிகை காலத்தில் நடைபெறும் இந்த பேரணிகளால் சாந்தினி சவுக் உள்ளிட்ட முக்கிய சந்தைகள் முடங்கும் என வியாபாரிகள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்தது. ஆனால், அச்சப்படாமல் போராட்டத்தோடு சேர்த்து மக்கள் டெல்லியில் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி ஆதரவு தர வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். இரு பெரும் அரசியல் துருவங்களின் நேருக்கு நேர் மோதலால் தலைநகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.
ராம்லீலா மைதானம், உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணைய அலுவலகத்தை சுற்றி பல அடுக்கு தடுப்புகள், முக அங்கீகார கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வான்வழி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 163வது பிரிவு அமல்படுத்தப்பட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்த புகார்கள் ெதாடர்பான பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஆளுங்கட்சி - எதிர்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


