Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான லஞ்சப் புகார் குறித்த விசாரணைக்கு அனுமதி: கேரள உள்துறை அமைச்சர் உத்தரவு

திருவனந்தபுரம்: இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்தபோது மலேசிய பொறியாளரிடம் இருந்து ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டதாக கூறப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா அனுமதி அளித்துள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளரான ஞானேஷ் குமார் கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் கடந்த 2005ம் ஆண்டு கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்தார். அப்போது கேரள மாநில போக்குவரத்து திட்டத்தின் கீழ் ரூ. 215 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்கான ஒப்பந்தத்தை மலேசியாவின் பதிபெல் நிறுவனமும், கேரளாவைச் சேர்ந்த பகீரதா இன்ஜினியரிங் நிறுவனமும் இணைந்து மேற்கொண்டன.

பதிபெல் நிறுவனத்தின் பொறியாளராக மலேசியாவைச் சேர்ந்த லீ சி பென் என்பவர் பணிபுரிந்தார். இந்தப் பணிகளை 2005ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் பணிகள் முடியாததால் 2006 மே மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகும் பணிகள் முழுமையடையாததால் ரூ. 17 கோடி மதிப்பிலான ஒப்பந்தத் தொகையை அரசு நிறுத்தி வைத்தது.

இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்ததாரர்கள் ரூ. 12.5 கோடி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒப்பந்த தொகையை விடுவிக்க லீ சி பென்னிடமிருந்து ஞானேஷ் குமார் ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் கூறப்பட்டது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான லீ சி பென் மலேசியாவுக்கு திரும்பிச் சென்று அங்கு வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஞானேஷ் குமாருக்கு எதிராக அப்போது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தியது. பின்னர் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை சமீபத்தில் கேரள அரசு தூசி தட்டி எடுத்தது.

இந்நிலையில் ஞானேஷ் குமார் ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டதாக லீ சி பென் தன்னிடம் கூறியதாக இந்த சாலைப்பணிகளின் துணை ஒப்பந்ததாரரான சாஜன் என்பவர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சாஜன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தார். மேலும், இதற்கு முன் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை ஞானேஷ் குமாரை காப்பாற்றுவதற்காகவே நடத்தப்பட்டது என்றும், தங்களைப் போன்ற முக்கிய சாட்சிகளிடம் அப்போது வாக்குமூலம் பெறப்படவில்லை என்றும் சாஜன் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் சாஜன் அளித்த புகாரின் பேரில் ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான கோப்பு முதல்வர் வி.டி.சதீசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.