சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது குறித்த கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பொது தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து, பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆட்சேப மனு தாக்கல் செய்யப்பட்டது. பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட தீட்சிதர்களின் வாரிசுகளிடம் விசாரித்த போது அந்த சொத்துகள் குறிப்பிட்ட அந்த தீட்சிதர்கள் சொந்தமாக சம்பாதித்தது என்று தெரியவந்துள்ளது. கோயிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலங்கள் தீட்சிதர்களால் விற்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அறநிலையத் துறை, 20 ஏக்கர் விற்பனை குறித்து மட்டும் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது என்று வாதிட்டார்.
இந்த வாதங்களை மறுத்த அறநிலையத்துறை தரப்பு சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், சுவாதீன உரிமை பெற்றவர் எழுதிய உயிலின் அடிப்படையில் குறிப்பிட்ட தீட்சிதர் நிலத்தை விற்பனை செய்துள்ளார். நிலத்தின் பட்டா இன்னும் கோயிலின் பெயரிலேயே உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்களுக்கு பொது தீட்சிதர்கள் விற்பனை செய்தது தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய உள்ளோம் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கூடுதல் ஆதாரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்யலாம். கோயிலின் 101 கட்டளைகளில் எத்தனை கட்டளைகள் தற்போது செயல்படுகிறது, எத்தனை கட்டளைகள் செயல்படவில்லை, கட்டளை தீட்சிதர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து பொது தீட்சிதர்கள் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.