Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நாட்டுக்கோழி வளர்ப்பு நிறுவனம் நடத்தி மெகா மோசடி; 2 பேருக்கு ரூ.24.54 கோடி அபராதம்: 10 ஆண்டு சிறை

கோவை: நாட்டுக்கோழி வளர்ப்பு நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட உரிமையாளர்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.24.54 கோடி அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியில் ‘கிரீன்லைப் பார்ம்ஸ்’ என்ற பெயரில் நாட்டுகோழி வளர்ப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களாக பெருந்துறையைச் சேர்ந்த விசுவநாதன் (40) மற்றும் கவுரிசங்கர் (40) ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 9 ஆயிரமும், அதனுடன் போனஸ் தொகையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், கூடுதலாக முதலீடு செய்பவர்களுக்கு அதற்கேற்றவாறு நாட்டுக்கோழி பண்ணைப் பராமரிப்பு உபகரணங்கள், கோழிக்குஞ்சுகள் மற்றும் தீவனங்கள் ஆகியவற்றைத் தருவதாகவும், கோழிகளுக்கு மருத்துவப் பரிசோதனை, காப்பீடு உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த வாக்குறுதிகளை நம்பி கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,062 பேர் ரூ.24 கோடியே 53 லட்சத்து 99 ஆயிரத்தை முதலீடு செய்தனர். ஆனால், அவர்கள் கூறியபடி முதலீட்டாளர்களுக்கு மாதந்தோறும் லாபத் தொகையையோ, போனஸ் தொகையையோ, வளர்ப்புக் கோழிக் குஞ்சு மற்றும் உபகரணங்களையோ வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது அவர்கள், தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால், அந்த நிறுவன உரிமையாளர்கள் மீது முதலீட்டாளர்கள் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை நிதிநிறுவன மோசடிகள் மற்றும் வைப்பாளர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் (டான்பிட்) சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி செந்தில்குமார், பொதுமக்கள் இழந்த மோசடித் தொகையான ரூ. 24 கோடியே 53 லட்சத்து 99 ஆயிரத்தை அபராதமாகவும், விஸ்வநாதன் மற்றும் கவுரிசங்கர் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.