Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சத்ரபதி சிவாஜி படத்திற்கு இணையாக வைத்ததால் மோடி போட்டோவை அகற்றிய ராஜ் தாக்கரே மகன் மீது வழக்கு: புனே அரசு கல்லூரியில் பெரும் பரபரப்பு

புனே: புனே அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அகற்றியதாக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயின் மகன் அமித் தாக்கரே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேயின் மகன் அமித் தாக்கரே, மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்காக புனேயில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு வருகை தந்தார். அப்போது, கல்லூரியின் சுவரில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் உருவப்படத்திற்கு அருகிலேயே பிரதமர் மோடியின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்ததை அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டினர்.

சத்ரபதி சிவாஜி படத்திற்கு இணையாக பிரதமரின் படம் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமித் தாக்கரே, அந்த படத்தை உடனடியாக அகற்றும்படி கூறினார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை சுவரில் இருந்து அகற்றினர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பின்னர் அந்த புகைப்படம் மீண்டும் அதே இடத்தில் மாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சதுஷ்ரிங்கி போலீசார், அத்துமீறி நுழைதல் மற்றும் சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் அமித் தாக்கரே மற்றும் அவருடன் இருந்த 20 முதல் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த அமித் தாக்கரே, ‘என் மீது பதிவான முதல் வழக்கே சிவாஜி தொடர்பான விவகாரத்தில்தான். தற்போது மீண்டும் சிவாஜிக்காக என் மீது 2வது வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அதை மகிழ்ச்சியோடு ஏற்பேன்’ என்று தெரிவித்தார்.