செஸ் உலக கோப்பை சிண்டாரோ சாம்பியன்
அர்போரா: கோவாவில் செஸ் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வந்தன. இதில் சிறப்பாக செயல்பட்ட உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஜவோகிர் சிண்டாரோ, சீனாவின் வெ யி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்கள் இடையே கடந்த 24 மற்றும் 25 தேதிகளில் நடந்த இரு போட்டிகளும் டிராவில் முடிந்தன. அதையடுத்து, இருவரும், நேற்று நடந்த டைபிரேக்கர் போட்டியில் ஆடினர். ரேபிட் முறையில் நடந்த அந்த போட்டியில் சிண்டாரோ அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம், சிண்டாரோவும், வெ யியும், கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் ஆட நேரடி தகுதி பெற்றுள்ளனர். தற்போது 19 வயதாகும் சிண்டாரோ, 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் ஆனவர். செஸ் உலகக் கோப்பை போட்டியில் சிண்டாரோ, 16வது நிலை வீரராக பட்டியலிடப்பட்டார். இருப்பினும் முதல் நிலை வீரர்களை வீழ்த்தி சிண்டாரோ சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.