Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளின் பயிற்சியாளராக இருந்து வந்த ஸ்டீஃபன் பிளெமிங் விலகல்!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளின் பயிற்சியாளராக இருந்து வந்த ஸ்டீஃபன் பிளெமிங் விலகினார்.

2008-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் வீரராக இணைந்த பிளெமிங், 2009-ஆம் ஆண்டு அதன் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். அவரது பயிற்சியின் கீழ் சென்னை அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்தது. 2027 சீசனுக்கு முன்னதாக அணியின் எதிர்காலம் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து, அவர் அணியிலிருந்து விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்தும் ஸ்டீபன் பிளெமிங் விலகினார்.

பிளெமிங்கிற்கு பதிலாக அடுத்ததாக யார் நியமிக்கப்படுவார் என்பதை அணி நிர்வாகம் இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும், புதிய பயிற்சியாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பிளெமிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விளையாட்டு உலகில் 18 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான எனது பயணம், எனது பயிற்சியாளர் வாழ்க்கையிலேயே மிகவும் சிறப்பானது. இங்கிருந்து மிகுந்த நன்றியுணர்வுடன் விடைபெறுகிறேன். நாம் இணைந்து சாதித்தவை குறித்து நான் பெருமையடைகிறேன். மறக்க முடியாத வெற்றிகள், சவாலான தருணங்கள் என எப்போதுமே என் மனதில் நிலைத்திருக்கும் பல நினைவுகளை நாம் உருவாக்கியுள்ளோம். சென்னை எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமானதாக இருக்கும். வரும் காலங்களிலும் சென்னை அணியை நான் தொடர்ந்து ஆதரிப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

2009-இல் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிளெமிங், எம்.எஸ். தோனியின் தலைமையில் அணிக்குத் தொடர் வெற்றிகளைப் பெற்றுத் தந்தார். இவரது பயிற்சியின் கீழ் சென்னை அணி 2010 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து ஐபிஎல் கோப்பைகளை வென்றது. மேலும், 2010 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்றது.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, 2018-இல் கம்பேக் கொடுத்த சென்னை அணி தனது 3-ஆவது கோப்பையைக் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து 2021-இல் கொல்கத்தாவுக்கு எதிராகவும், 2023-இல் 5-ஆவது முறையும் கோப்பையை வென்று ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து மிக வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உருவெடுக்க பிளெமிங் முக்கியக் காரணமாக இருந்தார்.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் கூறுகையில், "இந்த பயணத்தின் தொடக்கத்திலிருந்தே, நாங்கள் விளையாடும் முறையை மட்டுமல்லாமல், ஒரு சிறந்த அணியாக நாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பிளெமிங் வடிவமைத்தார். அணியில் தொடர்ச்சியான செயல்பாடு, எளிமை மற்றும் அணிக்கு முன்னுரிமை அளிக்கும் கலாச்சாரத்தை அவர் உருவாக்கினார். வீரர்களைப் புரிந்து கொண்டு, அவர்களிடம் இருக்கும் திறமையை முழுமையாக வெளிக்கொணரும் அவரது ஆளுமையே அவரது மிகப்பெரிய பலமாகும்" என தெரிவித்தார்.