Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

சென்னை மெட்ரோ சார்பில் கிண்டியில் பன்முக போக்குவரத்து மையம்: ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் (CMAML), கிண்டியில் ஒரு பன்முக போக்குவரத்து மையத்தை (Multimodal Transit Hub) அமைப்பதற்காக ஆலோசனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை, டெல்லியைச் சேர்ந்த CBRE South Asia Private Limited என்ற நிறுவனத்திற்கு ரூ.76.70 லட்சம் (GST உட்பட) மதிப்பில் வழங்கியுள்ளது. இந்தத் திட்டப்பணியின் முக்கிய நோக்கம், கிண்டியில் அமையவிருக்கும் பன்முக போக்குவரத்து மையத்திற்கான, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை (DFR) மற்றும் விரிவான திட்ட அறிக்கை (DPR) ஆகியவற்றைத் தயாரிப்பதாகும்.

மேலும், இதன் கீழ் ஆலோசகர் விரிவான சந்தை பகுப்பாய்வு, பரிவர்த்தனை ஆலோசனை சேவைகள், நிலப் பயன்பாட்டு மதிப்பீடுகள் மற்றும் சட்டரீதியான ஆய்வுகளுடன் கூடிய ஆரம்பக்கட்ட திட்ட வரைபடங்களை (Concept Plans) தயாரித்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். முன்மொழியப்பட்டுள்ள இந்த பன்முகப் போக்குவரத்து முனையம், கிண்டியில் தற்போதுள்ள புறநகர் ரயில்வே (Suburban Rail), மாநகரப் பேருந்து நிலையம் (MTC Bus Terminus) மற்றும் கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றை ஒன்றிணைத்து அவற்றிற்கு இடையே தடையற்ற மற்றும் எளிதான இணைப்பை வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் பயணிகளின் வசதியை கணிசமாக மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தை முறைப்படுத்தவும், வணிகக் கட்டமைப்புகளை ஒருங்கிணைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னையின் மிகவும் பரபரப்பான போக்குவரத்து பகுதிகளில் ஒன்றான கிண்டியில் பயணிகள் பாதுகாப்பாகவும், எவ்வித இடையூறுமின்றியும் பயணிப்பதை உறுதி செய்யவும் இத்திட்டம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வேதா சுமன், மற்றும் CBRE South Asia Private நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.பிரீதம் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி, தி. அர்ச்சுனன், ரேகா பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.