சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.14.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வடமாநில பெண் கைது செய்தனர். தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 35 வயது பெண் ஒருவர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். அந்த பெண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். உடைமைகளுக்குள் பதப்படுத்தப்பட்ட, தாய்லாந்து நாட்டு உணவு பாக்கெட்டுகள் இருந்தன. அந்த உணவுப் பொருள் பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தபோது, அதனுள் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 14.5 கிலோ போதைப் பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.14.5 கோடி. இதையடுத்து வட மாநில பெண் பயணியை கைது செய்த சுங்க அதிகாரிகள், போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதோடு அவரை மேலும் விசாரித்த போது, இவர் சர்வதேச போதை பொருள் கடத்தும் கும்பலின் கடத்தல் குருவியாக செயல்படுவதும், இவர் ஏற்கனவே போதைப் பொருட்களை கடத்திக் கொண்டு வந்து சுங்கத்துறையிடம் பிடிபடாமல், தப்பி வெளியில் எடுத்து சென்றதும் தெரிய வந்தது. போதைப் பொருளை, வடமாநில பெண் கடத்தல் குருவி சென்னையில் யாரிடம் கொடுக்க கொண்டு வந்தார் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



