Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு வரும் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், என்று சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2024-25 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொது பிரிவு ஆண், பெண் இருபாலருக்கும் 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெற உள்ளது.

விளையாட்டு போட்டிகள் சென்னை மாவட்டத்திலும் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட உள்ளது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat..tn.gov.in or https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்திட கடைசி நாள் வரும் 25ம் தேதி. பள்ளிகளில் 12 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள் பள்ளியிலிருந்து Bonafied Certificate உடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

கல்லூரிகளில் 17 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் கல்லூரியிலிருந்து Bonafied Certificate அல்லது ஐடி கார்டுடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல்,கையுந்துபந்து, மேசைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கேரம் , செஸ் மற்றும் கோ-கோ (பள்ளி பிரிவு மட்டும்) ஆகிய விளையாட்டுகள் மாவட்ட அளவிலும் மற்றும் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்துபந்து, வாள்சண்டை, ஜூடோ மற்றும் குத்துச்சண்டை போட்டிகள் ஆகியவை மண்டல அளவிலும் பாதை சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டிகள் நேரடி மாநில அளவிலும் நடத்தப்பட உள்ளன.

பொதுப்பிரிவு: இதில் பங்கேற்பவர்கள் 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் ஆதார் அட்டையில் உள்ள மாவட்டத்தில் மட்டுமே கலந்து கொள்ள இயலும். கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கையுந்துப்பந்து, கேரம், கிரிக்கெட் மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பொதுப்பிரிவில் உள்ளவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மாற்றுத்திறனாளி: இதில் வயது வரம்பு இல்லை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். மாற்றுத்திறனாளி- 100 மீ., ஓட்டம், குண்டு எறிதல், இறகுப்பந்து மற்றும் வீல்சர் மேசைப்பந்து. பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி- 100 மீ., ஓட்டம், குண்டு எறிதல், சிறப்பு கையுந்துபந்து. மனவளர்ச்சி குன்றியோர்- 100 மீ., ஓட்டம், குண்டு எறிதல், எறிபந்து. செவித்திறன் மாற்றுத்திறனாளி 100 மீ., ஓட்டம், குண்டு எறிதல், கபடி.

அரசு ஊழியர்கள்: தற்போது பணியில் உள்ளவர்கள் மட்டும் பணிபுரியும் மாவட்டத்தின் சார்பாக மட்டுமே கலந்து கொள்ள இயலும். கபடி, தடகளம், இறகுப்பந்து கையுந்துபந்து, சதுரங்கம் மற்றும் கேரம். மேலும் முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா, சென்னை-84 என்ற முகவரியில், அல்லது 7401703480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.