Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் கடந்த 29 நாட்களில் ஆன்லைனில் மக்களிடம் சைபர் மோசடி கும்பல் பறித்த ரூ.2.31 கோடி மீட்பு: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை

சென்னை: சென்னையில் கடந்த 29 நாளில் பொதுமக்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் மோசடி கும்பல் பறித்த ரூ.2.31 கோடி பணத்தை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி சைபர் க்ரைம் போலீசார் மீட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கடந்த 29 நாளில் சைபர் மோசடி கும்பலிடம் இருந்து அதிக பணம் மீட்டதில் சென்னை காவல்துறை முன்னிலை வகிக்கிறது. சென்னை பெருநகர காவல்துறையில் போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில், அண்மைக்காலமாக சைபர் மோசடி கும்பல் பொதுமக்களிடம் மின்சார கட்டணம், ஆதார், பான் கார்டு புதுப்பிப்பு, வங்கி ஏடிஎம் கார்டுகள் மாற்றுவது, போதை பொருள் பார்சல் வந்துள்ளது என புதுப்புது வகையில் ஆன்லைன் மூலம் பணத்தை பறித்து வந்தது.  பொதுமக்களிடம் தொடர் மோசடியில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலும், சைபர் குற்றவாளிகளை கைது செய்யும் வகையிலும் மத்திய குற்றப்பிரிவில் தனியாக சைபர் மோசடி தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.

அதோடு இல்லாமல் சென்னை பெருநகர காவல் துறையில் கிழக்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு என 4 மண்டலங்களில் அந்தந்த இணை கமிஷனர்கள் மேற்பார்வையில் சைபர் க்ரைம் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டன. இந்த காவல் நிலையங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டாலும் முறையாக காவலர்கள் நியமிக்கப்படாமல் பெயரளவில் செயல்பட்டு வந்தது. இதை தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் அருண், அனைத்து சைபர் க்ரைம் காவல் நிலையத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ஆட்களை நியமித்து நடவடிக்கை எடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் எல்லையில் சைபர் மோசடி கும்பல் மூலம் பணத்ைத இழந்த பொதுமக்களுக்கு விரைந்து பணத்தை மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 1ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலான நாட்களில் சைபர் குற்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் 1930 என்ற அவசர அழைப்பு மூலம் அளித்த புகார்கள் மீது, சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைமில் பதிவான 26 புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி அதன் மூலம் ரூ.1,57,37,833 மீட்டுள்ளனர்.

அதேபோல், சென்னை வடக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் 17 புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து ரூ.14,89,381 ரொக்கத்தை மீட்டுள்ளனர். சென்னை மேற்கு மண்டலத்தில் 25 புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து ரூ.4,06,252 ரொக்கம் மீட்டுள்ளனர். சென்னை தெற்கு மண்டலத்தில் 44 புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து ரூ.36,06,420 ரொக்கம் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை கிழக்கு மண்டலத்தில் 32 புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து ரூ.18,74,301 ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை பெருநகர காவல் எல்ைலயில் கடந்த 29 நாளில் 1930 என்ற அவசர அழைப்பு மூலம் அளிக்கப்பட்ட 144 புகார்கள் மீது போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையால் 2 கோடியே 31 லட்சத்து 14 ஆயிரத்து 187 ரூபாய் சைபர் மோசடி கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான நாட்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு நீதிமன்ற நடவடிக்கை மூலம், தாக்கலான புகார்களின் பேரில் 36 கோடியே 27 லட்சத்து 57 ஆயிரத்து 595 ரூபாய் முடக்கப்பட்டும், நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.12 கோடியே 42 லட்சத்து 35, 320 பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பெற்று தரப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ஆன்லைன் உள்ளிட்ட சைபர் ேமாசடி கும்பலிடம் இருந்து கடந்த ஒரு மாதத்தில் சென்னை பெருநகர காவல்துறை ரூ.2.31 கோடி பணத்தை மீட்டதில் முன்னிலை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.