Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடிநீர் வழங்கியதற்காக சென்னை குடிநீர் வாரியத்திற்கு ரூ.96 கோடி வரி நிர்ணயித்த ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்த வகையில் 96 கோடியே 10 லட்சம் ரூபாயை ஜி.எஸ்.டி.யாக செலுத்துமாறு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு மத்திய ஜி.எஸ்.டி. கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்ததற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும் எனக் கூறி 96 கோடியே 10 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய ஜி.எஸ்.டி. கூடுதல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜி.எஸ்.டி. வரம்பில் இருந்து அரசு நிறுவனம் வழங்கும் சேவைக்கு விலக்களித்து 2017ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீகரற்று வாரியம் அரசு நிறுவனம் என்பதால் அந்த நிறுவனம் வழங்கும் சேவைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு பொருந்தும் என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீகரகற்று வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு ஜி.எஸ்.டி கூடுதல் ஆணையம் தரப்பில், குழாய் மூலம் குடிநீர் விநியோகிப்பது மட்டுமல்லாமல் வர்த்தக நிறுவனங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் லாரிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீரை விற்பனை செய்வதால் அது ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் வரும். அதனால் வரி செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று பதிலுக்கு வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரி செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கும் முன்பு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கருத்தைக் கேட்கவில்லை. குடிநீர் விநியோகிக்கப்பட்டதா, சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகிக்கப்பட்டதா என்பதை தெளிவுபடுத்தாமல் வரி செலுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், ஜி.எஸ்.டி கூடுதல் ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம், இந்த விஷயத்தில் மறு பரிசீலனைக்காக குடிநீர் வடிகால் வாரியம் ரூ.3 லட்சத்தை டெபாசிட் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. அந்த தொகையை ஆறு வாரங்களில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் செலுத்த வேண்டும். இத்தொகையை செலுத்திய மூன்று மாதங்களில் குடிநீர் வாரியத்துக்கு உரிய வாய்ப்பை ஜி.எஸ்.டி கூடுதல் ஆணையர் வழங்கி புதிதாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.